வரலாறு
நாம் வரலாறுகளை முழுமையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்பதுடன் நமக்கு எது தேவையோ, நாளைய தலைமுறை இதை மட்டுமே வரலாறாய் பார்க்க வேண்டும் என்பதை மட்டுமே வரலாறாகவும் மாற்றி வைத்திருக்கிறோம். எல்லா வரலாறுகளுமே சில விஷயங்களில் மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது திணிக்கப்பட்டதாகவோ இருக்கின்றன. இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நிறைய வரலாற்றுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன என்பது மகிழ்வான விசயம். வரலாற்றில் இருந்து ஏதோ ஒரு இழையை எடுத்து அதன் வழி தங்களின் கற்பனையை விரித்து புதினமாக்குகிறார்கள். இதில் வரலாறு என்பது ஒரு நூல்தானே என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை, காலம் காலமாக நாம் அப்படித்தானே வரலாறை எழுதுகிறோம். இப்படியாவது வரலாறு எழுதப்படுகிறதே என்று சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.
நமக்கு இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு முன் நடந்தவற்றைக் கூட நம்மால் இப்போது திரும்பிப் பார்க்க முடியாது. உங்க தாத்தா வீரமா இருந்தாருன்னு அம்மாவோ, அப்பாவோ அல்லது ஊரோ சொல்லக் கேட்டிருப்போம் ஆனால் அந்தத் தாத்தா செய்த ஏதாவது ஒரு வீரதீரச் செயலாவது நமக்குத் தெரியுமா என்றால் அதுதான் இல்லை. மேலே சொன்னதைப் போல் ஒரு இழையை எடுத்து ‘பராக்கிரம பாண்டியனின் பொன்வாள்‘ அப்படின்னு எழுதுபவர்கள், இணையத்தில் ஏதோ ஒன்றைத் தேடி, அதை வைத்து தேடுதலைத் தீவிரமாக்கி இதுதான் இந்த வரலாறு என்று எழுதுபவர்கள், முன்பு யாரோ எழுதிய வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அதில் தன் கற்பனையைக் கலந்து எழுதுபவர்கள் என இவர்களை எல்லாம் விட, தனக்குச் சில தலைமுறைக்கு முந்தைய மனிதர்களின் கதைகளை கேட்டு, அப்போது இந்த நகரம் எப்படி இருந்தது என்பதை அவர்களின் விபரணையை வைத்து தனது நாவல்களில் வரலாறாய் பகிர்ந்து வரும் கரன் கார்க்கி சிறந்தவர் என்பதைவிட, தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று சொல்லலாம். அவர் எந்த இடத்திலும் நானே பெரியவன், என் எழுத்தே பெரிது எனப் பேசியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபமாய் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உரைகளைக் கேட்க ஆரம்பித்து, இப்போது அவரின் பேச்சுக்கு அடிமையாகி விட்டேன் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு பேச்சிலும் எத்தனை எத்தனை விசயங்கள்… வரலாறுகள், புத்தகங்கள், சினிமாக்கள் என்று விரிவாகப் பேசுகிறார். மிளகுக்காக வந்தவன் நம்மை அடிமையாக்கியது, உப்புவேலி போட்டது, நிலஅளவை, எவரெஸ்ட்டின் பெயர் விளக்கம், ராகுல் சாங்கிருத்தியாயன், டால்ஸ்டாய், டார்வின், ஷேக்ஸ்பியர், தான் கடந்து வந்த பாதை எனப் பேச ஆரம்பித்தால் எஸ்.ரா என்னும் பெட்டகத்துக்குள் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் கொட்டிக் கொண்டே இருக்கிறது. போனில் ரீல்ஸ், அரட்டை என இருக்கும் நம் பிள்ளைகள் புத்தக வாசிப்பை அதிகமாய் விரும்புவதில்லை, சிலர் ஆடியோ கதைகளை கேட்டால் போதும் என நினைக்கிறார். அதுவும் கதை சொல்கிறேன் என தங்களின் எண்ணைத்தையெல்லாம் சேர்த்து கதை விடுபவர்களின் பேச்சைக் கேட்பதைவிட எஸ்.ரா போன்றோரின் உரைகளைக் கேட்கச் சொல்வோம். நிறைய விசயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.


