பறவைகள் கூச்சலிட மெல்ல சூரியன் விடை பெறத்
தொடங்கியிருந்தான். மேகத்தினூடே சிந்திய மஞ்சள் கற்றைகள் சுற்றி இருந்த இடம்
முழுவதையும் தங்கமாக மாற்றி இருந்தது. கீச் கீச்சென்று அடையச் சென்ற
பறவைக் கூட்டத்தை மொட்டை மாடியில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தவளை “மயூரி
“என்ற குரல் திசை திருப்பியது.
திரும்பிப் பார்க்க மயூரிக்கு ஒரே சந்தோஷம்
“எப்படீ வந்த நீ” என்று மகிழ்ந்தவள் மாடிப்படியில் நின்றிருந்த தோழி தேவியை ஓடி
வந்து கட்டி அணைத்தாள். “நீ நாளைக்கு கிளம்பிருவியேன்னு உனக்காகவே அம்மா
ஸ்பெஷலா செய்து கொடுத்தாங்க” என்றபடி கையில் வைத்திருந்த டப்பாவை திறந்து சூடு
மாறாத அதிரசத்தை எடுத்து அவள் வாயில் திணித்தாள் தேவி.
“வாவ் காலேஜுக்கு கொண்டு வருவல்ல அதே
டேஸ்ட். எப்படி இருக்காங்க அம்மா?” என்று நலம் விசாரித்தாள் மயூரி.
“நல்லா இருக்காங்க. வழக்கம்போல் கால் வலி தான் கொஞ்சம் பிரச்சனை” என்றாள்
தேவி.
தேவி, மயூரியின் நெருங்கிய தோழிகளில் ஒருத்தி.
தேவி, மயூரி, சலீமா மூவருமே முதல் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாய்ப்
படித்தவர்கள். படிப்பு மட்டுமில்லை, எல்லா கூத்தும் கும்மாளமும்
போட்டவர்கள்.
டீச்சர் பாடம் நடத்தும் போது வளவளவென்று
பேசியே சலிப்படையச் செய்து விடுவார்கள். கோபம் முற்றிப்போனால்
வகுப்புக்கு வெளியே அனுப்பிவிடுவார் டீச்சர். பாதி நாள் வெளியே நின்றபடியே
கழியும். அப்படியும் கண்சாடையாலும் குசுகுசு பேச்சுக்களாலும் சேட்டைகள்
தொடரும்.
ஒரு முறை பள்ளியிலிருந்து திரும்பும்போது
உரையாடல் சூடு பிடிக்கவே மூவரும் ஒரே சத்தமும் சிரிப்புமாய்
பேசிக்கொண்டிருக்க, பக்கத்து வீட்டவர்கள் என்னாச்சோ ஏதாச்சோவென பதறிப்போய்
ஓடிவந்து விசாரித்ததை இன்றும் நினைவுப்படுத்தி சிரித்து முடிப்பார்கள்.
“நீ வரப்போவதை முன்கூட்டியே சொல்லியிருந்தால்
சலீமாவையும் கூப்பிட்டிருக்கலாமே. ஒரு மெசேஜை அனுப்பிப் பார்ப்போம்” என்று
வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு பதிலை எதிர்பார்த்து ஆர்வத்தோடு போனை
பார்த்தனர்.
‘ஹேய் எனக்கும் வரணும்ன்னு ஆசைதான். உடனே
வரமுடியாத நிலைடீ. இன்னைக்கு நைட்டுக்குள்ள முடிக்கவேண்டிய பேப்பர்ஒர்க்ஸ்
இருக்கு. மேனேஜரை சமாளிக்க முடியாது. வேலை முடித்தவுடன் அப்பாவையும்
டாக்டரிடம் கூட்டிப்போக வேண்டும். இப்போதெல்லாம் மறதியினால் மாத்திரைகளைத் தவறாக
போட்டு விடுவதால் நான் தான் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொடுக்கிறேன். சாரிடீ,
என் கதையை சொல்லி போரடிக்கிறேன். நீங்க என்ஜாய் பண்ணுங்க. பை டி ‘ என்ற
மெசேஜ் வந்திருந்தது. ஏமாற்றத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொண்டனர்.
“அவளும் பாவம், அம்மா இறந்ததிலிருந்து
அப்பாவையும் தம்பியையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆண்டவன் அவளுக்கு ஒரு வழியை
காட்டட்டும். சரி வா கீழே போகலாம். எப்படி இருட்டிவிட்டது பாரு.
பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியல” என்றபடி இருவரும் மாடியிலிருந்து கீழே
இறங்கினர்.
சலீமா, பேருக்கு ஏற்றபடி குடும்பத்திற்கு
பாதுகாப்பு அரணாக இருப்பதாலேயே திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் அவள் இந்த காலத்துப்பிள்ளை. அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல்,
தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கிறாள். அப்பாவையும் தம்பியையும் கூடவே
வைத்துக்கொள்ள சம்மதிக்கும் மாப்பிள்ளை வரும் வரை காத்திருக்கிறாள்.
“காபி எடுத்துக்கோங்க” இரண்டு கைகளிலும் காபி
டம்ளரை நீட்டினாள் மீனாட்சி அம்மாள். “தேங்க்ஸ்மா” என்றபடி வாங்கி
குடித்தாள் தேவி. “எனக்கு இப்ப வேணாம்மா நீயே குடி” மயூரி.
“ஏண்டி இவளே, நாளைக்கு ஊருக்கு கிளம்புறது
ஒரு மாதிரி இருக்கு, மொட்டை மாடிக்கு போனா மனசுக்கு இதமா இருக்குமேனு தானே மேலே
போன. உன் தோழியுடன் பேசி கலகலப்பாகவும் ஆயிட்டியே. இப்போ மறுபடியும்
ஆரம்பிக்கறே பாரு” மீனாட்சி அம்மாள்.
“விடுங்கம்மா சரியாயிடுவாள்”
என்றபடி காபியை உறிஞ்சிய தேவியின் கண்கள் ரெண்டு நாளைக்கு முன்னால் கட்டியிருந்த
கலர் பலூன்கள், ஜீகினா தோரணங்களில் மேய்ந்தது. அலங்கரிக்கப்பட்டிருந்த
வரவேற்பறையில் ஹேப்பி பர்த்டே பேனர். பக்கத்தில் எண் ஒன்று வடிவில் அடர் ரோஜாநிற
பலூன். சுவரில் மாட்டியிருந்த கருப்பு சட்டம் போட்ட புகைப்படத்தில் சிரித்த
முகத்தோடு மயூரி, கணவன் சதீஷ். இருவருக்கும் நடுவில் ரோஜா நிற புசுபுசு
கவுனில் குட்டிப்பாப்பா சஹானா. பிரேம்லெஸ் கண்ணாடி, கூர் புருவங்கள்.
ட்ரிம் செய்யப்பட்ட தாடி. வளைகுடா நாட்டில் ஒரு ஐடி வேலையில் இருக்கிறான்.
மூன்று வார லீவில் வந்தவன். சஹானாவின் பிறந்தநாளைக் கொண்டாடி முடித்த கையோடு
நேற்று கிளம்பிவிட்டான். அந்த புகைப்படச் சட்டம் மூவரையும் சேர்த்துப்
பிணைத்திருந்தது.
அந்த படத்தையே பார்த்துக்கொண்டு
நின்றிருந்த மயூரியின் துப்பட்டா இழுக்கப்பட அவளின் கவனம் கலைந்தது.
குனிந்து பார்க்க அங்கே மேல் சட்டை அணியாமல் ஜட்டியோடு கண்ணை கசக்கியபடி நின்றது
குழந்தை சஹானா.
“ஏய்.. தங்கமே நீ எழுதுட்டியாடா” அக்குளில் கையை
விட்டுத் தூக்கி இடுப்பில் அமர வைத்தாள். தூக்க மயக்கத்தில் தோளில் சாய்ந்த
குழந்தையை தட்டிக் கொடுத்தவாறே தழும்பிய கண்ணீரை குனிந்து தோளில் துடைத்துக்
கொண்டாள்.
காபி டம்ளரை மேசையில் வைத்துவிட்டு எழுந்த தேவி,
மயூரியின் அருகில் வந்து தோளைத் தொட்டு “நீ ஒன்னும் வருத்தப்படாத மயூரி.
சஹானாவின் எதிர்காலத்துக்காக தானே இவ்வளவு கஷ்டப்படுறீங்க. சீக்கிரமே
காண்ட்ராக்ட் முடிந்து ஒரேடியாக திரும்பி வந்துவிடுவாய். ரொம்ப யோசிக்காம போய்
பேக் பண்ணு. மறக்காம நான் கொண்டு வந்த முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்து
வை. சேஃப் ஜர்னிடீ” என்றவள் மீனாட்சி அம்மாளிடம் “போயிட்டு வரேன்மா” என்று
சொல்லிக் கிளம்பினாள்.
அவள் கிளம்பவும் ராகவன் செருப்பை கழட்டிவிட்டு
சொம்பில் தண்ணீர் மொண்டு காலில் ஊற்றிவிட்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது. ராகவன்
மயூரியின் அப்பா. ரிட்டையர்ட் ஹெட் மாஸ்டர், யதார்த்தவாதி. “எல்லாம் எடுத்து
வச்சிட்டியாம்மா. நாளைக்கு ஏர்போர்ட் போக ராஜன் ட்ராவல்சில் கார்
சொல்லியிருக்கிறேன். டிரைவர் நல்ல பையனாம். டிராலி எடுக்கக்கொள்ள கூடமாட உதவியா
இருப்பான். என் உடல்நிலை இடம் கொடுத்தால் நானே வந்திருப்பேன். எல்லாம் அவன்
செயல்” சொல்லிவிட்டு சாப்பிட அமர்ந்தார். அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்கச்
சென்றனர். மழை தொடங்கி இருந்தது.
மயூரி சன்னமான வெளிச்சத்தில் சஹானாவின்
முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். கழுத்தைக் கட்டி அணைத்திருந்த பிஞ்சு
கைகளில் முத்தமிட்டாள். இரவு மிகவும் இருட்டாக இருப்பதாக தோன்றியது.
இன்றைய இருள் அவள் மனதை பிரதிபலிப்பதாக உணர்ந்தாள். மின்விசிறி சுற்றுவதை
வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று “உண்மையில், கஷ்டத்துடன் நிம்மதியும்
வருகிறது” என்ற குரான் வசனம் நினைவுக்கு வந்தது. ஆறுதல் சொல்லவோ அல்லது சமாதானப்படுத்தவோ
இதை சலீமாவின் அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறாள். இப்போதைக்கு அவளின்
பதைபதைக்கும் நெஞ்சை அமைதிப்படுத்தி விழி மூட வைக்க அந்த நினைவு போதுமானதாக
இருந்தது.
விடிவெள்ளி முளைத்து மழை விட்டிருந்தது.
‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார் ‘ தூரத்து ஸ்பீக்கரில் ஒலிக்கத் தொடங்க சூரியன்
எட்டிப்பார்க்கத் தொடங்கியது.
“பத்திரமா போயிட்டு வாம்மா. மாலேயில்
பிளைட் இறங்கியவுடனே போன் பண்ணும்மா” சொல்லி கை அசைத்தார் ராகவன். மீனாட்சி
அம்மாளும் “நல்லபடியா போயிட்டு வா “என்று சொல்லி “அம்மாவுக்கு டாடா சொல்லுடா
செல்லம்” எனச் சொல்ல, சஹானா நடப்பது புரியாமல் வலது கையைத் தூக்கி டாடா
காட்ட, மயூரி கார் ஜன்னலுக்கு வெளியே கை நீட்டிப் பிடித்துக் கொண்டாள். கார்
கிளம்ப கோர்த்துத்திருந்த விரல்கள் மெல்ல பிரிந்தன.
தெருமுனை வரை எட்டிப்பார்த்தவாறே
கையசைத்து வந்தவள், கார் வளைந்தும் சட்டென்று ஜன்னலை ஏற்றிவிட்டு கண் மூடி
சாய்ந்து கொண்டாள்.
கல்லூரி கடைசி நாள் வாழ்க்கையின் இலக்கு
பற்றிய பேச்சு தொடங்கவும், மயூரி வெளிநாட்டில் வேலைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை
வெளிப்படுத்தினாள். சலீமா “நானெல்லாம் நல்லா அழகானவனா, கை நிறைய
சம்பாதிக்கிறவனா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிடுவேன் அவ்வளவுதான் என்
இலக்கு” என்று சொல்ல அனைவரும் சிரித்தது கண் முன்னே விரிந்தது.
கல்லூரி முடிந்ததும் வேலைக்குப் போனது,
கல்யாணம் முடித்து குழந்தையும் பிறந்தது, இழுத்தடித்துக் கொண்டிருந்த வேலைக்கான
ஆர்டர் திடீரென்று வந்தது, பால்குடி மறந்த கையோடு ஆறுமாத குழந்தையை
பெற்றோரிடம் விட்டுவிட்டு வேலைக்கு சேர்ந்தது.. எல்லாமே படம் போல் ஓடியது.
இப்போது, வேலை பார்க்கும் மாலத்தீவு
மருத்துவமனைக்குத் தான் லீவுமுடிந்து திரும்புகிறாள்.
‘நாம் ஆசைப்பட்டது தானே இப்போது
நடக்கிறது. நான் மகிழ்ச்சியாக அல்லவா இருக்க வேண்டும்? குடும்பத்தின்
எதிர்காலத்தை எண்ணித் தானே இப்படித் திட்டமிட்டோம்’ தொடர்ந்தது மன ஓட்டம்.
மொபைல், சார்ஜர், அணிந்திருந்த வளையல்கள்,
கைக்கடிகாரம் அனைத்தையும் சம்பல் நிற நெகிழித் தட்டில் போட்டுவிட்டு
செக்யூரிட்டியில் காத்திருந்தாள் அவளுடைய பையை பரிசோதித்த பெண் செக்யூரிட்டி
ஆபிசர் காக்கி சீருடையில் மிடுக்காகவும் அழகாகவும் தோற்றமளித்தார். “உள்ள
எதுவும் ஸ்னேக்ஸ் இருக்குதாமா” என்றார் “ஆமாம்” என்றவளிடம் ஒரு போட்டலத்தை
எடுத்து “இது என்ன” என்றார். “இனிப்புப் பலகாரம். வீடுகளில் பெண்கள் செய்து
கடையில் கொடுத்து விற்பார்கள்” என்ற மயூரி “உங்களுக்கு வேணுமா” எனக்கேட்க “நாங்க
இங்கேயே வாங்கி கொள்வோமே. உங்களுக்கு தான் கிடைக்காது. எடுத்துட்டுப்
போங்க” என்றார். ஒவ்வொன்றாக வெளியே எடுத்துப் பார்த்தவர் இது என்ன என்றார்
“கறி ஊறுகாய்”. கேட்டவர் முகத்தில் ஆச்சரியம். “அப்டியா எதில் செய்தது” எனக்
கேட்டார்.
“கறி போட்டு” என்றாள். “அதான்
சொன்னீங்கல்ல.. சிக்கனா? மாட்டானா?” என்றார். “பீப். எங்க ஊரில் கிடைக்கும்.
அந்தப்பக்கம் போனா கண்டிப்பா வாங்குங்க” என்றாவாறே பையின் ஜிப்பை இழுத்து
மூடி விட்டு ‘குடியுரிமை’ நோக்கிச் சென்றாள். செக்யூரிட்டி ஆபீஸர்
என்றாலே, தமிழிலோ ஆங்கிலத்திலோ ஏதாவது கேட்டால் ஹிந்திலேயே பதிலளித்து,
விரைப்பாக இருப்பார்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ஒரு யதார்த்தமான பெண்
அதிகாரியை சந்தித்தது, அவளை கொஞ்சம் தளர்த்தி யிருந்தது.
விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் “வாட்
வுட் யூ லைக் மேடம்?” என்ற விமானப் பணிப் பெண்ணிடம் காபி கேட்டாள். அவள்
கேட்காமலேயே எக்ஸ்ட்ரா சர்க்கரையையும் கொடுத்து “என்ஜாய்” என்று சொல்லிவிட்டு
நகர்ந்தாள். காபியை உறிஞ்சிக் கொண்டே ‘இவளுக்கும் பெற்றோர் குடும்பம்
பிள்ளைகள் இருக்கும் தானே. முப்பதாயிரம் அடிக்கு மேலே பறந்து கொண்டு சிரித்த
முகத்தோடு அத்தனை பேரையும் எப்படி உபசரிக்கிறாள்’ என வியந்தாள். யோசித்த
நொடியிலேயே தன் மனச்சோர்வும் குழப்பமும் அர்த்தமற்றதாக மேகங்கள் போல் கரைந்து
போகக் கண்டாள். கடைசி மிடறு காபி தொண்டையில் இதமாய் இறங்கியது.
விமானத்தின் ஜன்னல் வழியே தெரியும் அடர் நீலக்
கடலில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் டர்க்காய்ஸ் நீலநிற திட்டுக்களாய் தீவுகள்,
மாலேயின் வருகையை அறிவித்தன. உற்றுப் பார்த்த மயூரிக்கு தண்ணிக்கு
அடியில் இருக்கும் பவளப்பாறைகள் துல்லியமாகத் தெரிந்தன. இவ்வளவு
தெளிந்த கடல்நீர் இருக்கிறதாவென முதல் முறை பார்க்கும் போது
ஆச்சரியப்பட்டிருக்கிறாள். இப்போதும் அதே ஆச்சரியம் தான், இப்போது ஜன்னலில்
பிரதிபலிக்கும் தன் கண்களில் மின்னிய தெளிவைப் பார்த்து!
கார்மேகங்களைக் கிழித்துக் கொண்டு விமானம்
தரையிறங்கியது.
விமான நிலையம் விட்டு வெளியே வந்ததும்
படகுத்துறைக்கு நடையை துரிதப்படுத்தினாள்.
பொடு ஃ பல் ஹு டு ஒரு குட்டிதத்தீவு.
தென்னை மாங்குறோவ் மரங்கள் சூழ ரம்மியமாயிருக்கும். ஆயிரத்திற்கும்
குறைவான மக்களே வாழும் அங்குள்ள ஒரே மருத்துவமனையில் தான் அவள் வேலை
பார்க்கிறாள். அங்கு படகில் தான் போயாக வேண்டும். அரைமணி நேர
வேகப்படகுப் பயணம். சுற்றுலா பயணிகள் தங்கள் ரிசார்ட் தீவிலிருந்து
வந்திருக்கும் சிப்பந்திகளோடு ஆடம்பர படகுகளில் ஏற ஒவ்வொரு படக்காக
கிளம்பியது.
டிக்கெட் எடுத்து விட்டு மயூரி ஒரு படகில்
ஏறி அமர்ந்தாள். அது தான் அந்த ஊர் டவுன் பஸ். அன்றாடத் தேவைக்காக
தீவுகளிலிருந்து நகரத்திற்கு வந்து போகும் மக்களுக்காக இயங்குகிறது. படகில்
ஒன்றிரெண்டு ஷார்ட்ஸ் அணிந்த வெள்ளைக்காரர்கள். பக்கத்தில் அமர்ந்திருந்த
பாட்டியின் கையில் கண் மருத்துவமனை பை. அதை கெட்டியாகப் பிடித்திருந்தார்.
இவள் பார்த்ததும் புன்னகைத்தார். எதிரே அமர்ந்திருந்த இளம் பெண்ணின் கையில்
குழந்தை. தோளில்போட்டு தட்டிக் கொடுத்தவரே மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
படகு கிளம்பியது.
கட்டிடங்கள் தூரத்துப் புள்ளியாய் மறைய,
சுற்றிலும் கடல் நீர் மட்டுமே. ஒரு நிறுத்தம் வந்தது.
வெள்ளைக்காரர்கள் நன்றி சொல்லி இறங்கவும், படகு மீண்டும்
கிளம்பியது.
திடீரென காற்றின் வேகம் அதிகரிக்க, ஒவ்வொரு
அலையும் படகை மோதும் போது பலமான ஓசையை எழுப்பியது. இருக்கையின் கைப்பிடியை
பிடித்துக்கொண்ட மயூரியின் முகத்தில் சிறு பதட்டம். சுற்றியும் பார்த்தாள்.
எல்லோரும் வெகு சாதாரணமாக அமர்ந்திருந்தது அவளுக்கு மிகுந்த ஆச்சரியம்.
ஜீன்ஸ் இளைஞன் ஹெட்போனில் பாட்டு கேட்டபடி கண்மூடி இருந்தான். அவள்
பக்கத்தில் அமர்ந்திருந்த பாட்டியும் கூட சீட்டில் தலை சாய்ந்து பாதி தூக்கத்தில்
இருந்தார். ஒரு கை மட்டும் அதே இறுக்கத்தோடு பையைப் பிடித்திருந்தது.
என்ஜின் இரைச்சல் அவள் பயத்தை மேலும் கூட்டியது. காதை பொத்திக் கொண்டாள்.
குழந்தை தூக்கம் கலைந்து அழத் தொடங்கியது.
மற்றொரு அலை வந்து மோதவும், அவள்
அனிச்சையாக பாட்டியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். மெல்லக் கண் திறந்து பார்த்த
பாட்டி, தன் மற்றொரு கையை மயூரியின் கை மீது வைத்தாள். மெலிந்து, எலும்புகள்
துருத்திக் கொண்டிருந்த அந்த கைகளில் ஒவ்வொரு சுருக்கமும் ஒரு கதையை
சொல்லியது. தேவைப்படும்போது கிடைத்த அந்த விரல் நுனிகளில் இருந்த ஸ்பரிசம்,
இதமாகவும் அன்பாகவும் அதற்கும்மேல் அப்போதையின் அதீத தேவையாகவும் இருந்தது
மயூரிக்கு.
தூரத்தில் பொடுஃபொல்ஹுடு தீவு கண்ணுக்குத்
தென்பட்டது.
காற்று சுழன்று வீச, இன்னொரு பேரலை வந்து
மோதியது. இப்போராட்டம் படகுக்கும் கடலுக்குமானதல்ல, மனிதனின் மன உறுதிக்கும்
இயற்கையின் கட்டுப்பாடற்ற சக்திக்கும் நடப்பதாகத் தோன்றியது. குழந்தை வீல்
வீல் எனக் கத்த ஆரம்பித்தது.
குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல்
பரிதாவித்தாள் தாய். மயூரிக்கும் நிலை கொள்ளவில்லை. சட்டென்று
இருக்கையிலிருந்து எழுந்தாள். அந்தப் பெண்ணருகில் சென்றமர்ந்தாள்.
‘குழந்தையை என்னிடம் கொடு’ என்று சைகையில் கேட்க, அந்தப் பெண், குழந்தையை
அவளிடம் கொடுத்தாள். வாங்கிய குழந்தையை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டாள்
மயூரி.
அதன் காதில் பாடலொன்றை மெல்லிய குரலில்
பாடினாள். சட்டென்று கை மாறியதால் குழம்பியிருந்த குழந்தை பாடல் கேட்டதும்
நிமிர்ந்து மயூரின் முகத்தைப் பார்த்தது. அதன் விரிந்த கண்களுக்குள் அவள்
தொலைந்து போனாள். மெல்ல மெல்ல குழந்தையின் அழுகை நின்றது. மயூரியின்
காதுகளில் படகின் எஞ்சின் சத்தம் சஹானா ராகத்தில் ஒலிக்கத்
தொடங்கியிருந்தது.
படகு தீவை அடைந்தது. அது தான் கடைசி
நிறுத்தம். குழந்தையை தாயிடம் கொடுக்க கண்களில் நன்றியோடு வாங்கிக்கொண்டாள்.
கைப் பிடித்து இறங்க உதவிய மயூரியின் கன்னத்தை வருடி தன் விரல்களை முத்திக்
கொண்டாள் பாட்டி.
மயூரி புன்னகைத்தபடி பெட்டியை இழுத்துக்கொண்டு
முன்னோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் வாழ்வின் பின்னலில் இவர்களும் புதிய இழைகள்
ஆனார்கள.
தீவின் மணலில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும்
நம்பிக்கையும் உறுதியும் வெளிப்பட்டது. ஆம்..அந்தத் தீவின் அதே நம்பிக்கையும்
உறுதியும் தான்.


