யாரும் தடம் உருவாக்காமல்
தடுக்காமல்
தானாகவே ஓடும்
நதிகளின் அழகும் அழகுதான்…
தடுப்பணைகளில்
ததும்பும் தண்ணீரும்
அழகுதான்….
தடுப்பணை இல்லையென
வருந்தவும் இல்லை.
தடுத்தால்
குதூகலம் கொள்ளவும் இல்லை.
நதி.
நதிகளின் இயல்பு
எதையும்
சேதாரம் செய்யாமல்
ஓடுவதே..
தன்னை விட பலவீனமான
கரைகளுக்குக் கட்டுப்பட்டு ஓடும்
நதிதான்
நீரழுத்தம் கூடும் போது
கரையுடைக்கும்.
அழுத்தம் குறைந்த பின்
தானுடைத்த கரைகளுக்குள்
கட்டுப்பட்டுக் கிடக்கும்.
நதிகளின் இயல்பு
எதையும்
சேதாரம் செய்யாமல் ஓடுவதே..
–இரா. தங்கப்பாண்டியன்
கடமலைக்குண்டு


