கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்கு கருத்தினையும் தருவது கலையாகும். அக்கலைகள் பண்பாட்டு தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவதால்தான், கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கிறது. சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப்பார்க்க இயலாக் கூறுகளாக திகழ்பவை நிகழ்கலைகள். அப்படிப்பட்ட கலைகளுள் ஒன்றான தெருக்கூத்து பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக இருந்தாலும் அந்தக் கலைஞர்களின் வாழ்வு ரசிக்கும்படியாக இருப்பதில்லை .அப்படியான ஒரு கதைகளத்தில் அமைந்ததுதான் உன்மத்தம்.
ராஜவேலு என்னும் கூத்துக்கலைஞர்தான் இக்கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக திகழ்கிறார். அவருடைய வாழ்வில் அக்கலை ஏற்ப்படுத்திய தாக்கம், கலைக்கும் கலைஞனுக்கும் இடையே உள்ள உறவு, அக்கலையால் அவர் சந்தித்த எதிர்ப்புகள் என எல்லாவற்றையும் எழுத்தில் உள்ளடக்கி இருக்கிறார் இந்நூலாசிரியர். குடும்ப சூழ்நிலையால் உடலளவில் அக்கலையை பிரிந்திருந்தாலும் மனதளவில் அக்கலையை பிரியமுடியாமல் தவிக்கும் ஒரு கலைஞனின் மனப்போராட்டத்தை விவரிக்கிறது இந்நாவல். ஒரு விஷயத்தை கலைநோக்கோடு அணுகி, கற்பனையும் கலந்து தன்னுடைய மண்சார்ந்த எழுத்துகளால் வெற்றிகரமாக அமைத்து கொடுக்கும் பாணி கொண்ட எழுத்தாளர் பரிவை சே. குமார். நான் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்த புத்தகமாக நான் கருதுவது உன்மத்தம்.


