குமாருக்கு
பதட்டமாகிவிட்டது. இரு பாக்கெட்டிலும் கைகளைவிட்டு அலசு அலசென அலசினார். எந்தக் கையிலும்
சாவி சிக்கவில்லை. காருக்குள்தான் அவரது கைப்பேசியும் இருப்பதாக சத்தமாக புலப்பினார்.
சுற்றிலும் பார்த்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இவர்கள் எப்போதும் இப்படித்தானே. யாருக்கு என்ன சிக்கல் என்றாலும் தங்களை பாதிக்காதவரை
அவர்களும் அதனை சட்டை செய்வதில்லை. சில சமயங்களில்
அது அவர்களை பாதித்தாலுமே அவர்களுக்கு அது தெரிவதுமில்லை. பழகிவிட்டது.
குமார் தன் பலம் கொண்டு கண்ணாடியைக்
கீழிறக்கி பார்க்கிறார். கைகள் வழுக்கி கீழே வருகிறதே தவிர கண்ணாடி கொஞ்சமும் இறங்கி
வரவில்லை. இவ்வளவு இழுத்தும் கீழே இறங்கி வராத காரின் கண்ணாடி; அவருக்கு வேறு யாரையோ
நினைக்க வைத்திருக்கும் போல. அந்த நபரை சத்தமாக திட்டினார். அது அங்குள்ள ஒருவரின்
காதில் விழுந்திருக்க வேண்டும்.
இதுவரையில் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த
அவருக்கு, உதவி செய்யும் எண்ணம் ஏற்பட்டது. அருகில் வந்து “என்ன
ஆச்சி…?” என விசாரிக்கிறார்.
குமாருக்கு ‘ஹப்பாடா…’ என இருந்தது.
சுமார் ஒரு மணி நேரமாக இந்தக் காரை திறக்க முயன்று கொண்டிருப்பதாக சொல்லி சாவியையும்
கைப்பேசியையும் உள்ளே வைத்துவிட்டேன் என சொல்லிவிட்டு இதுவரை செய்த காரியத்தின் விளைவாக
வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டார். ரொம்பவும் சோர்வாகிப்போனார்.
வந்திருந்தவர், “ஓ… அப்படியா…
இந்த ஹோண்டா கார்ல் இதுவொரு பிரச்சனைதான்… மறந்தாப்ல சாவியை உள்ள வச்சிட்டா… அது பாட்டுக்கு
லாக் ஆகிடும்…”
“அதைச் சொல்லுங்க… இப்ப பாருங்க என் நிலமையை… நான் வேற அவசரமாக போகனும்… என்ன பண்றதோ தெரியல…”
“இந்த ஹொண்டா காரைப் பத்தி தெரிஞ்சதாலதான் நான் இன்னொரு சாவியை
என்னோட பேக்லயே வச்சிருப்பேன்… தோ பாருங்க…”
என்றவர் தன் லெப்டப் பையில் இருந்து
ஒரு சாவியை எடுத்து அதன் பட்டணை அழுத்தினார். அந்த ஹொண்டா கார் ‘பிப்…பிப்…’ என்ற சத்தத்துடன் திறந்தது.
“சரி உள்ளே போய் உங்க பொருளை எடுத்துக்கோங்க… நானும் வீட்டுக்கு
போகனும்…” எனச் சொல்லி கதவை திறந்துவிட்டு திரும்பி பார்க்கிறார்.
குமாரைக் காணவில்லை. மாட்டியிருந்தால் என்னவோ ஆகியிருப்பார். இவ்வளவு நிதானமான காருக்கு சொந்தக்காரரை குமார் இதுவரை சந்தித்தது இல்லை.
உதவ வந்தவர் சட்டென ஹொன்டாவில் அமர்ந்து
கிளம்பவும் தூரத்தில் ஒருவர் தன் ஹொண்டா கார் திருடுபோவதைப் பார்த்து பதறியடித்துக்
கொண்டு வரவும் சரியாக இருக்கிறது.


