VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: சந்தைக்குப் போவோமா… நிஸ்வா – பகுதி 2
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > சந்தைக்குப் போவோமா… நிஸ்வா – பகுதி 2
தொடர்கள்

சந்தைக்குப் போவோமா… நிஸ்வா – பகுதி 2

இளங்கோ ராமசாமி
Last updated: June 18, 2026 1:33 pm
10 Views
Share
11 Min Read
நிஸ்வா சந்தை
நிஸ்வா சந்தை
SHARE

ஒமானின் கலாச்சாரத் தலைநகரான  நிஸ்வா என்ற புராதான நகரின் இதயப் பகுதி ‘“சூக் நிஸ்வா” (Souq Nizwa )  என்றறியப் படுகிறது.  ‘“சூக் “ என்றால் அரேபிய மொழியில் சந்தை என்று பொருள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது ஓமானில் இஸ்லாம் வேரூன்றியதற்கு முன்பே இந்நகரம் மஸ்கட்டிற்கும், ஓமானையும் ஏமனையும் இணைக்கும் புகழ் பெற்ற தோஃபார் (Dhofar) மாகாணத்திற்கும் இடையேயான ஒரு முக்கியமான இணைப்புப் புள்ளியாக இருந்திருக்கிறது. 

பண்டைய காலத்தில் சூக் என்றழைக்கப்படும் இச்சந்தைகள் தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ளும் வர்த்தகர்கள் கூடி, தங்கி, செய்திகளையும் பண்டங்களையும் பரிமாறிக் கொள்ளும் முக்கியமான பொருளாதார மற்றும் அதிகார மையங்களாகச் செயல்பட்டு வந்திருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  ரோமப் பேரரசு ஆசியாவிலிருந்து பட்டு, பீங்கான், தேநீர், போன்ற பொருட்களையும்   அரேபியாவில் இருந்து சாம்பிராணி, மணிக் கற்கள், வாசனைப் பொருட்கள் போன்றவற்றையும் பெருமளவில் இறக்குமதி செய்தது. பதிலுக்குக் குதிரைகள், தங்கம், வெள்ளி, திராட்சை ரசம், ஆலிவ் எண்ணை போன்றவற்றை ஏற்றுமதி செய்தது. இந்தப் பட்டு (Silk) மற்றும் சாம்பிராணி (Incense) வர்த்தகத் தடங்கள் உருவாகின.

அப்படிப் பட்ட வணிகத் தடங்கள் நெடுக  முக்கிய நகரங்களில் பெரும் சந்தைகள் உருவாகின. மத்திய ஆசியாவில் இஸ்லாம் வேரூன்றித் தழைக்க ஆரம்பித்த போது “சூக்” எனும் சந்தைகள் ஒழுங்கு படுத்தப்பட்டுக்  கட்டமைக்கப்பட்டன. இவை ‘பஜார்’ என்றும் அறியப்படுகின்றன. பெரும்பாலும் நகரின் மையத்திலும், நகரின் முக்கிய மசூதிக்கு அருகிலும் நிர்மாணிக்கப் பட்ட இப்படிப்பட்ட பரந்து விரிந்த  வணிக வளாகங்கள்,  அரசியல் மற்றும் கலைகள் வளரக் கூடிய சக்தி வாய்ந்த அதிகார மையங்களாக  உருவெடுத்தன. டமாஸ்கஸ், பாக்தாத், கெய்ரோ போன்ற நகர்களின் பெரும் சந்தைகள் உலகப் புகழ் பெற்றவை.

“ சூக்” எனப்படும் இந்த அரேபியச் சந்தைகளை நமது ஊரின் வாரத்தில் ஒரு நாள் கூடும் சந்தைகளோடு ஒப்பிட முடியாது. நமது ஊரின் வாரச் சந்தைக் கலாச்சாரமே கிட்டத்தட்ட மறைந்து விட்டது. சிறு வயதில் நான் என் அப்பச்சியோடும், அம்மாயியோடும் அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு குதூகலத்தோடு ஞாயிற்றுக் கிழமைச் சந்தைக்குச் சென்று முறுக்கும், பொரிகடலையும் வாங்கி வந்த  அனுபவங்கள் என் மகளுக்கு வாய்க்கவில்லை. அப்பொழுதெல்லாம் அம்மாயி செட்டியாரிடம் எண்ணையைச் சட்டியில்  வாங்கி வருவார். எனக்காவது நாடார் கடைக்கோ செட்டியார் கடைக்கோ போய் மளிகை சாமான்களும், காய் கறிகளும் வாங்கி வந்த அனுபவம் உண்டு. அம்மாவோடும் அப்பாவோடும் காய்கறிச் சந்தைகளுக்குப் போன அனுபவமும் உண்டு. ஆனால் என் மகளெல்லாம் ஒரு நாளும் சந்தைக்குப் போனதில்லை. இப்பொழுதெல்லாம 10 ரூபாய்க்குக் கறி வேப்பிலை வேண்டு மென்றால் கூட ஸ்விக்கியில் ஆர்டர் போட்டு விடும் வசதி வந்து விட்டது. 

இப்படிப் பட்ட சூழலில் நமது ஊர் கிராமத்து வாரச் சந்தைகளின் அனுபவத்தையும், பண்டைய அரபு தேசங்களின் நிரந்தரச் சந்தை அனுபவங்களையும் ஒருங்கே கிடைக்கப் பெறும் கிட்டத்தட்ட உலகின் மிகவும் தனித்துவமான  சந்தை என நிஸ்வாவின் வெள்ளிக் கிழமைச் சந்தையைக் கூறலாம். 

நிஸ்வா சூக்கானது, ஒரு அழகிய மசூதிக்கும், புராதானமான மிகப் பெரிய நெடுந்துயர்ந்த  வட்ட வடிவக்  கோட்டைக்கும் அருகில் அமைந்திருக்கிறது. நாடெங்கிலும் பல்வேறு பெரிய கோட்டைகள் இருந்தாலும் ஒமானில்,  நிஸ்வாவின் கோட்டை தனித்துவமானது. அதே போல அரபு நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும்  பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும்  சூக்குகள் இருந்தாலும் நிஸ்வா சூக் வித்தியாசமானது. 

கோட்டைக்கும், சந்தைக்கும் பின்புறமிருக்கும் குறுகிய சத்துகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதியில் பேரீட்சைத் தோப்புகளின் ஊடே  பல பழைய சிதிலமடைந்த மண் வீடுகளைக் காண முடியும். அவற்றில் சிலவற்றை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து, நவீன வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகளாக மாற்றி வைத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட அழகிய விடுதியொன்றில் தான் உங்களை கடந்த அத்தியாயத்தின் ஒரு மதிய வேளையில் இறக்கி விட்டுவிட்டுச் சென்றிருந்தேன். 

நீங்களும்  பயணக் களைப்பு தீர நன்கு உறங்கி எழுந்து ஒரு குளியலைப் போட்டு விட்டு சந்தையைச் சுற்றிப் பார்க்கத் தயாராக இருப்பீர்கள் என நம்புகிறேன். 

வாருங்கள் மெல்ல நடந்து கோட்டைக்கு அருகே உள்ள Tamrah என்ற மொட்டை மாடி கஃபே வுக்குப் போய் ஒரு காபியோ, டீயோ குடித்து விட்டு அதன் பிறகு ஊரைச் சுற்றுவோம். அந்தக் கஃபேயில் இருந்து பார்த்தால் பருந்துப் பார்வையில் நிஸ்வா கோட்டையையும், சூக்கையும், சுற்றிலும் உள்ள வீடுகளையும், பசுமை மாறா பேரீட்சைத் தோப்புக்களையும் பார்த்து ரசிக்கலாம். அந்தக் கஃபேயில் ஐஸ்  கட்டிகள் மிதக்கும் மாதுளைத் தேநீர் எனக்கு மிகவும் பிரியமானதொன்று. தேநீரையும் சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டு கீழிறங்கி மெல்ல கோட்டைப் பகுதியை விட்டு வெளியே சென்றால் மிகவும் பிஸியான சாலையைப் பார்க்கலாம். பரபரப்பாக செல்லும் வாகனங்களையும், பல விதமான மனிதர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தால் ஒரு வறண்ட ஆற்றுப் படுகையின் வலப்புறம் நூற்றுக் கணக்கான கார்கள் நிறுத்தப் பட்டிருப்பதைக் காணலாம். 

இடது புறம் பார்த்தால் நிறைய ஓமானிகள் பெரும் ட்ரக்குகளில் இருந்து பெரும் பெரும் வண்ண வண்ண அழகிய தரை விரிப்புகளைக் கடை பரப்புக் கொண்டிருப்பதைக் காணலாம். நாட்டு மருந்துக் கடை, அலுமினியப் பாத்திரக் கடை என நம்மூரின் வாரச் சந்தைகளை நினைவுறுத்தும் விதவிதமான கடைகளை விரிப்பதில் மும்முரமாக இருக்கும் ஒமானிகளை ஒவ்வொரு  வியாழக் கிழமை மாலை தோறும் தவறாது காண முடியும். அங்கிருந்து சற்றே கிழக்கு நோக்கி நடந்தால் தங்களது கார்களை விற்க விரும்புபவர்கள் அவற்றைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, விலை, வாகனம் பற்ற்றிய விவரங்கள் மற்றும்  தொடர்பு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எழுதி காரின் முன் மற்றும் பின்புறக் கண்ணாடிகளில் ஒட்டிவிட்டுச் செல்வதைக் காண முடியும். ‘“கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தான ஆவணும்?” என்ற சொலவடைக்கு இணங்க பென்ஸ், BMW, Audi, மினி கூப்பர் என விதவித மான கார்களை நம்ப முடியாத விலைகளில் காண முடியும். 

அப்படியே சாலையைக் கடந்து இடது புறம் சென்றால் கிழக்கு ஒரமாக ஏழெட்டு வண்டிகளில்  பரபரப்பாக  சுடுவான் சுட்டு விற்றுக் கொண்டிருக்கும்  ஓமானிகளைக் காண முடியும். கோழி, ஆடு, மாட்டிறைச்சி மற்றும் மக்காச் சோளம் என பல ரக சுடுவான் கடைகள்,  இஞ்சியும் எலுமிச்சையும் கலந்த கரும்புச் சாறு விற்பவர் என நம்மூர் வியாபாரிகளைப் போலவே இங்கும் காண முடியும். 

வரிசையாக நிறுத்தப் பட்டிருக்கும் சந்தைக்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பலதரப்பட்ட கார்களின் ஊடே நடந்து மணல் வண்ணத்தில் உயர்ந்து நிற்கும் பெரும் மதிற் சுவர்களின் பிரம்மாண்டமான மரக் கதவுகளைக் கடந்து மெள்ள நடந்தால் வரிசையாக இருக்கும் அழகிய சிறு சிறு கடைகளை வேடிக்கை பார்ப்பது கண்களுக்கும் சிந்தைக்கும் விருந்தாக இருக்கும். இதுவரை  அரேபிய அல்லது ஆப்பிரிக்க சந்தைகளைக் கண்டிராதவர்களுக்கு இது மிகப் பெரும் குதூகலத்தை அளிப்பது சர்வ நிச்சயம். 

வழியெங்கும் அழகிய வேலைப் பாடுகள் நிறைந்த  மண் பானைகளும், சாம்பிராணித் தூபக் கால்களும், நெகு நெகுவெனப் பளபளப்பேற்றப்பட்ட பூண் போட்ட கைத்தடிகளும், பனை ஓலையில் வேயப்பட்ட பாய்களும், வெள்ளி நகைகளும், ஓமானின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசுகளும், வண்ண வண்ண அஞ்சலட்டைகளும், ஓலைக் கூடைகளிலும், சாக்குகளிலும் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பல வண்ண மசாலாப் பொருட்களும், தானியங்களும், சாம்பிராணிப் பாட்டில்களும், கயிறுகளும், தலைவிரிப்புகளும், மகளிர் அணியும் விதவிதமான ஆபரணங்களும் அழகாக அடுக்கி வைத்திருப்பது நாம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தளத்தில் இருக்கிறோம் என்பதற்குக் கட்டியம் கூறும். 

மாலை மங்கி இருள் சூழத் துவங்கும் வேளையில் மஞ்சள் சர  விளக்குகளின் ஒளியில் பாரம்பரிய ஆடையணிந்த ஓமானிகளும், பணி நிமித்தம் ஓமானில் வாழும் குடியேறிகளும்  பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும்  சுற்றுலாப் பயணிகளும் நிதானமாக நடை போடுவதையும், அவர்கள் முகத்தில் தவழும் நிம்மதி கலந்த மகிழ்ச்சியையும் பார்க்கப் பார்க்க நமக்குள்ளும் மிக மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். சந்திர வளையமாக இருக்கும் கடைகளுக்குள் புகுந்து வெளியே வரும் போது மறக்காது அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பானைகளுக்கு முன் நின்று  படம் பிடித்துக் கொள்ள வேண்டும். 

மேற்குக் கடைசியில் இருக்கும் பெரிய கடையில்  அணிவகுத்து நிற்கும் வித விதமான வெள்ளிப் பூண் போட்ட கைத்தடிகளையும், பழைய நாட்டுத் துப்பாக்கிகளையும், பெரிய ஓமானி போர் வாள்களையும், கஞ்சர் எனப்படும் இடுப்புப் பட்டையோடு இணைக்கப்பட்ட அலங்காரமான வெள்ளிக் குறுவாள்களையும், மணிக் கற்களையும், பெரிய பெரிய வெள்ளி ஆபரணங்களையும், வித விதமான பழங்காலப் பொருட்களையும் வேடிக்கை பார்த்து விட்டு எதிர்ப்புறம் உள்ள காய்கறி சந்தைக்குள் நுழையலாம். 

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை காய்கறிகள் மட்டுமே விற்கப் பட்டுக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட சந்தை,  இப்போது பெரும்பாலான கடைகளில் பரிசுப் பொருட்கள், நறுமணத் தைலங்கள், திண்பண்டங்கள், அல்வா கடைகளால் நிறைந்து பெரிதும் உரு மாறிவிட்டது. அனைத்துக் கடைகளும் ஓமானிகளால் மட்டுமே நடத்தப் படுகின்றன.

காய் கறி சந்தையின் வட புற வாசலில் நுழைந்து தென் கோடியை அடைந்தால் நிஸ்வாவின் மிகப் பெரியதும் புகழ் பெற்றதுமான ‘“அல் ஸைஃபி” ஓமானி அல்வா கடையின் பரந்த வளாகத்தை அடையலாம். முதன் முறை நிஸ்வாவிற்கு வரும் அனைவரும் அங்கு அலங்காரத்திற்காக வைக்கப் பட்டுள்ள அல்வா கிண்டும் பெரிய சட்டியின் முன் நின்று படம் பிடித்துக் கொள்ளத் தவறுவதில்லை. 

அந்தப் பெரிய கடையில் தீரத் தீர சாம்பிளுக்கு வைக்கப் பட்டிருக்கும் ஸ்பெஷல், நட்ஸ், குங்குமப்பூ என்ற பல ரக அல்வாக்களையும் வேண்டிய மட்டும் எடுத்து சுவைத்துப் பார்க்கலாம். நாவின் தித்திப்பைக் குறைக்க அங்கேயே ப்ளாஸ்க்கில் வைக்கப் பட்டிருக்கும் காவா எனப்படும் சர்க்கரை போடாத அரேபிய கடுங்காப்பியை ஊற்றிக் குடித்துக் கொள்ளலாம். 

அந்த அல்வாக் கடையின் நுழைவாயிலில் இருக்கும் படியில் ஏறி முதல் தளத்திற்குச் சென்றால் கலைப் பொருட்களையும், வண்ண வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் தட்டுக்களையும், சரவிளக்குகளையும் ஆசைதீரக் கண்டு கண்களுக்குள் நிறைத்துக் கொள்ளலாம்.

நிஸ்வா சூக்கை  விட இது போன்ற பழமையான, அரிய கலை பொருட்களை விற்கும் கடைகள் மஸ்கட்டின் ‘“மத்ரா சூக்” கில் தான் அதிகம். அதை விட உயரம் குறைவான, குறுகலான, வளைந்து நெளிந்து நீண்டு பல கிளைகளாகப்  பிரிந்து கிடக்கும் ‘“மத்ரா சூக்” தான் ஓமானில் உள்ளதிலேயே  அழகானாதும், மிகப் பெரியதானதுமாகும். 

இந்தக் காய்கறி சந்தையின் தென்புற வாசல் வழி வெளியேறினால் பேரீட்சை பழச் சந்தை தென்படும். முன்பு பல்வேறு வியாபாரிகள் வசம் இருந்த இடம் இப்போது ஒரு ஒற்றைக்கடையாக நவீன அலங்காரங்களுடன் மிளிர்கிறது. அங்கும் ஒரு ஏழெட்டு வகை பேரீட்சைகளை சுவைத்துப் பார்ப்பதற்காகப் பெரிய பெரிய தொட்டிகளில் நிறைத்து வைத்திருப்பர். ஒவ்வொன்றாக எடுத்து சுவைத்துப் பார்த்து விட்டு நமக்குப் பிரியப் பட்ட ரகத்தை வேண்டிய அளவு வாங்கிக் கொள்ளலாம். அல்லது கிழக்கு மூலையில் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கக் கூடிய ஒய்வெடுக்கும் கூடாரத்தில் கூடி அமர்ந்து காவாவைக் குடித்துக் கொண்டே கதைத்துவிட்டுக் கிளம்பலாம். 

அந்தக் கடை முழுவதும்  பேரீட்சைகளில் செய்த இனிப்புப் பலகாரங்கள், தேங்காய் மிட்டாய், கடலை மிட்டாய், பேரீட்சை சிரப், மிட்டாய்கள், சாக்லேட்டுகள் என நிறைந்து கிடக்கும். அங்கிருந்து வெளியே வந்தால் எதிர்புறம் மீன் சந்தை இருக்கும். ஆனால் இருட்டி விட்டால் மீன் சந்தை வெறிச்சோடிவிடும். 

இதுவரை நாம் கண்ட அனைத்தையும் ஓமானின் பிற சந்தைகளிலும் பார்க்க முடியும். ஆனால் ஓமானிலோ அல்லது வேறு எந்த அரபு தேசத்திலோ காண முடியாத ஆடு மற்றும் மாட்டு சந்தை மிகவும் தனித்துவமானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி ஆடு மாடுகளைச் சந்தைக்கு ஓட்டி வந்து ஏலம் கூறினார்களோ அதே முறை இன்று வரை தொடர்வது இந்தச் சந்தையில் மட்டுமே. 

அது மட்டுமின்றிப் பிற நாடுகளில பஇது போல நடத்தப்படும் புகழ்பெற்ற குதிரை சந்தை ஒட்டகச் சந்தைகளெல்லாம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கான வெறும் கண்காட்சிகள் மட்டுமே. அல்லது அவை ஒரு வருடத்தின் ஏதாவது ஒரு சில நாட்களில் மட்டும் கூடும் பண்பாட்டு, கலாச்சார அல்லது ஆன்மீக நிகழ்வாக இருக்கக் கூடும். 

ஆனால் நிஸ்வாவில் வெள்ளிக்கிழமை காலை கூடும் கால்நடை சந்தை மக்களின் வாழ்வியல் தேவைகளுக்கானது. அங்கு கால்நடைகளின் உரிமையாளகள் தாங்கள் விற்க விரும்பும் உயிரினங்களைப் பிடித்துக் கொண்டு ஏலம் விடப்படும் மைதானத்தின் வட்ட வடிவ கூடாரத்தை தங்கள் விலையைக் கூவிக் கொண்டே  சுற்றிச் சுற்றி வருவர். கூடாரத்தின் உள்ளே இருந்து விலங்குகளை  வாங்க வந்த ஓமானிகள் நோட்டம் இடுவர். தங்களுக்குத் தோதான ஆடோ மாடோ சுற்றுக்கு வரும் போது அவர்களும் வட்டப் பாதைக்குள் இறங்கி விலங்குகளைப் பரிசோதித்துப் பேரம் பேசி முடிப்பதை வெள்ளி தோரும் காண முடியும்.  

ஏலம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும். காலை பொழுது புலர்ந்ததும் துவங்கும் இந்தக் கால்நடை சந்தை குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் வெகு சுறு சுறுப்பாக இயங்கும். இப்படி இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் தங்கள் அன்றாடத்  தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தங்கள் வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்திருக்கும் உண்மைத் தன்மையே நிஸ்வா சூக்கின் தனிச் சிறப்பு. 

அதே போல வெள்ளிக் கிழமை காலை காய்கறிச் சந்தையின் கீழ்புறம் மீன் சந்தையை ஒட்டி சுற்று வட்டாரத்தில் இருந்து வெள்ளிக் கிழமை மட்டும் வரும் விவசாயிகள் தங்கள் உற்பத்தியைத் தரையில் கடை பரப்பி விற்றுக் கொண்டிருப்பர். அங்கேயே செல்லப் பிராணிகளின் மற்றும் பறவைகளின் விற்பனையும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும். பத்து வயது சிறுவர்கள் முதல் பழுத்த தும்பைப் பூ போன்ற நீண்ட தாடியுடன் கூன் தள்ளிய பெரியவர்கள் வரை தங்கள் தேசிய உடையான டிஷ்டாஷாவையும் தலைப்பாகையையும் அணிந்து சந்தையில் ஆர்வத்தோடு வியாபாரம் செய்யும் ஓமானிகளைப் பார்க்கும் நம்மையும் அவர்களது உற்சாகம் தொற்றிக் கொள்ளும். 

ஓமானிகளுக்குப் பிடித்த மற்றொரு மிக முக்கியமான பண்டம் தேன். அதனால் பாட்டில்களில் தேன் விற்கும் நிறைய ஓமானிகளையும் காண முடியும். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே முதல் நாள் மாலை பார்த்த வடபுறத்தில் சந்திர வளையமாக அமைந்திருக்கும் கடைகளைக் கடந்து கோட்டை இருக்கும் பகுதிக்குள் நுழைத்தால் அங்கே மரத்தடியில் குமித்து வைத்து விற்கப் பட்டுக் கொண்டிருக்கும் துப்பாக்கிச் சந்தையைக் காண முடியும். பெரும்பாலும் பழைய நாட்டு ரக ஒற்றைக் குழல் துப்பாக்கிகளும் அவைகளுக்கான தோட்டாக்களும், தோட்டாக்களைச் செருகிக் கொள்ளத் தேவையான இடுப்புப் பட்டைகளும் அங்கே விற்பனைக்குக் கடை விரிக்கப் பட்டிருக்கும். 

அந்தத் துப்பாக்கிகளில் ஒன்றைக் கையிலேந்தி மனதிற்குள் நம்மை வீரப்பனாகக் கற்பனை செய்து கொண்டு குறிபார்ப்பதைப் போன்ற போஸில் ஒரு படம் பிடித்துக் கொண்டால் சந்தைச் சுற்றுப்பயணம் இனிதே நிறைவுறும். 

அப்படியே அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கஃபேயில் அமர்ந்து பழச் சாறோ, சுலைமானியோ பருகிக் களைப்பாறிக் கொண்டிருங்கள். அதற்குள் அடுத்த ‘விண்மீன்’ தயாராகிவிடும். அந்த இதழில் நிஸ்வாவின் புகழ் பெற்ற கோட்டையைச் சுற்றிப் பார்க்கலாம். 

தொடர்ந்து பயணிப்போம்…. 

PrevPreviousஓ.கே. கண்மணி
Nextஅந்த மாலை – நான் உங்க கிட்ட அப்படியா பழகினேன்?Next

You Might Also Like

நிஸ்வா என்றொரு பழமையான நகரம்… நிஸ்வா – பகுதி 1
கணவாயும் குளங்களும்!!! நிஸ்வா – பகுதி 6
ஓ.கே. கண்மணி
மாயநிழல்
உன்மத்தம்
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்நிஸ்வாவிண்மீன் செப்டம்பர் 2025
Previous Article ஓ. கே. கண்மணி ஓ.கே. கண்மணி
Next Article நான் உங்க கிட்ட அப்படியா பழகினேன்? அந்த மாலை – நான் உங்க கிட்ட அப்படியா பழகினேன்?
1 Comment
  • Balaji Baskaran says:
    May 18, 2026 at 6:25 pm

    அருமையான தொடர்…

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?