எது நகைச்சுவை?
- பாலாஜி பாஸ்கரன்
எது நகைச்சுவை? எல்லாமே நகைச்சுவை என்றால் எதுதான் வாழ்வு?
நகைச்சுவை உணர்வு வாழ்வை சிக்கல்களில் இருந்து விடுவித்து இலகுவாக நகர்த்த நமக்கு உதவும். அது இன்றியமையாதது. இன்னும் சொல்லப்போனால் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான உணர்வு என்றும் சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு பாண்டா கரடி விழுந்து விழுந்து சிரித்த காணொளி பார்த்ததிலிருந்தும், சில குரங்குகள் சிரிப்பது போன்ற காணொளிகள் பார்த்ததிலிருந்தும், நகைச்சுவை உணர்வு உயிர்களுக்குப் பொதுவானது என்றும், வாழ்வின் இன்றியமையாத தேவை என்றும் உணர்கிறேன்.
ஆனால் சில உணர்வுப்பூர்வமான செயல்களை நகைச்சுவையாக்குவதை தவிர்க்க வேண்டும் என்று கருதுகிறேன். குறிப்பாகத் தமிழை நகைச்சுவையாக்குவதை ஏற்றுக் கொள்ளவே கூடாது. தூய தமிழில் யாராவது பேசினால் அவரை எள்ளி நகையாடவே விரும்புகிறோம். அதன் பின்னால் உள்ள உளவியல் நம்மால் இயலாததை அவர் செய்கிறார். அது நமக்கு வரவில்லை, ஆதலால் வன்மம் வளர்கிறது. அப்போது அவரை விட நாம் பெரியவர்கள் என எப்படி தோள்பட்டையைத் தூக்குவது? அவரை மட்டம் தட்டுவதில்தான் அது சாத்தியமாகிறது.
இதன் முக்கியமான தோற்றுவாயாக தமிழ்த் திரைப்படங்களைக் கருதுகிறேன். பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் இதுவரை தமிழாசிரியர்களைக் காட்சிப் படுத்திய விதம் ஏற்றுக் கொள்ளவே இயலாத ஒன்று. ஒரு பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற கதையமைப்பு என்றாலே அங்கே ஒரு தமிழாசிரியர் இருப்பார்; அவரை எல்லாரும் ஏளனம் செய்யும் ஒரு கோமாளியாகவே காட்சிப்படுத்தி வந்திருக்கிறது. அவரை கதாநாயகனும் அவர் நண்பர்களும் அவமானப்படுத்துவதாகவும், பட்டப்பெயர்கள் கொண்டு அழைப்பதாகவும் காட்சிகள் வைப்பதுண்டு. வேறெந்த மொழிக்காரர்களும் தங்கள் மொழி ஆசிரியரை இந்தளவுக்கு கேவலப்படுத்துவார்களா என்று தெரியவில்லை.
ஆக, இப்படி தமிழ், தமிழாசிரியர், தூய தமிழில் பேசுபவர்கள் என எல்லாரையும் நகைச்சுவை என்ற பெயரில் ஏளனம் செய்தும், இழித்து மட்டம் தட்டிப் பேசியும் வந்ததின் விளைவு என்ன? தமிழே அல்லாத வேற்றுச் சொற்கள் பல்கிப் பெருகிவிட்டன. அன்றாடம் செய்யும் ஒரு செயலைக் கூட இன்னொருவரிடம் தொடர்ந்து தமிழில் சொல்ல இயலவில்லை.
தமிழில் பேசவோ வேறேதும் தமிழ் பற்றி கருத்துகளைப் பதிவு செய்யவோ எண்ணும் போது ”ஆமாம் இவரு பெரிய புலவரு” எனக் ‘கலாய்’ என்றொரு புதிய சொல்லின் மூலம் அவமானப் படுத்தப்படுகிறோம். ‘சான்சே இல்ல’, ‘வேற லெவல்’, ‘பக்கா மாஸ்’, ‘தெறி’, ‘வைபு’, ‘கலாய்’ போன்றவை தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்களாக மாறி விட்டன.
நாம் நினைத்ததை நம் மொழியில் சொல்லக் கூட சொற்களை சிந்திக்காமல், எதோ ஒரு பொருளற்ற சொல்லைச் சொல்லி, நம் சிந்தனையையெல்லாம் முடக்கி, எதையும் தெரிந்து கொள்ள விரும்பாமல் அவசர அவசரமாக எதையும் அணுகி அடைந்து விடத் துடிப்பதின் விளைவு தமிழ்நாட்டின் தற்போதைய நிலையாக இருக்கிறது.
தமிழர்களை எல்லாம் ஆளுகின்ற, ஆட்சி நிர்வாகம் நடத்தி முக்கிய முடிவுகளும் சட்டங்களும் இயற்றுகின்ற சட்டமன்றத்தில் பேசுகிற பேச்சுகளையெல்லாம் கேட்கின்ற போது இவர்கள் இத்தனை நாள் தமிழ்வழிக் கல்வியில்தானே படித்து வந்திருப்பார்கள்? தமிழில்தானே பேசியிருப்பார்கள்? எண் தெரியவில்லை; எழுத்து தெரியவில்லை என்றால் அவர்கள் எல்லாம் இதற்கு முன் என்னவாகத்தான் இருந்திருப்பார்கள்? எப்படி குடும்பத்தில் பேசியிருப்பார்கள், கடையில் ஒரு பொருள் வாங்கியிருப்பார்கள், மற்ற மனிதர்களிடம் எப்படி பேசியிருப்பார்கள்? என்று பெரிய குழப்பமும் வேதனையும் மிஞ்சுகிறது.
எண்களைச் சொல்வதில் குழப்பம் எப்படி வரும்? கணியன் பூங்குன்றனார் என்ற பெயர் திருக்குறள், திருவள்ளுவர் போல் தமிழர்கள் எல்லோரும் நன்கறிந்த பெயர்தானே? எழுதச் சொன்னால் கூட கணியனா கனியனா என்று பிழை வரலாம்? ஆனால் பேசுவதில் எப்படி காணியாம் பூங்கொன்றன் வருகிறது? இவர்கள் தெனாலி படத்தில் கமல்ஹாசன் சொல்வது போல ஸ்டைலுக்காக தமிழைக் கெடுத்து வைத்திருக்கிறார்களா? அல்லது இவர்கள் இத்தனை ஆண்டுகளாக கற்ற கல்வியின், வாழ்ந்த வாழ்வின் மொத்த அறிவே இவ்வளவுதானா? என்ற வருத்தமும் மேலிடுகிறது.
ஆக மொத்தத்தில் தமிழையோ, தமிழில் பேசுபவனையோ நகைச்சுவையாக ஏளனம் செய்யத் தொடங்கியதின் விளைவு பெரிய சீரழிவில் கொண்டு போய் நிறுத்தும் என்பதற்கு தற்போதைய நாட்டு நடப்பே சாட்சி.


❤️❤️❤️