VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: இந்தியர் வீதி – அத்தியாயம் 2
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > இந்தியர் வீதி – அத்தியாயம் 2
தொடர்கள்

இந்தியர் வீதி – அத்தியாயம் 2

ஏதோதோ எண்ணங்கள் மனதில் ஓடின. அப்பா, அம்மாவிடம் எப்படி சொல்வது?

கண்ணன் விஸ்வகாந்தி
Last updated: October 15, 2026 3:27 pm
10 Views
Share
16 Min Read
SHARE

இந்தியர் வீதி

அத்தியாயம் – 2

  • கண்ணன் விஸ்வகாந்தி

ஒரு கனவு நனவானது. ஆசைகளும், கனவுகளும் அலைக்கழிக்க, அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தேன். விமானம் நின்றதும், லக்கேஜ் பகுதிக்குச் சென்றேன். கன்வேயர் பெல்ட்டில் பல வடிவங்களில், வண்ணங்களில் சூட்கேஸ்கள் சுற்றிக்கொண்டு இருந்தன. கொட்டை எழுத்தில் எனது பெயரை எழுதி வைத்ததால், எனது சூட்கேஸைக் கண்டு பிடிப்பது எளிதாக இருந்தது. சக்கரங்கள் இருந்ததால் தள்ளிச் செல்வது எளிதாக இருந்தது. நேராகக் குடியுரிமை சோதனைப் பகுதிக்குச் சென்றேன். மிகப்பெரிய கூட்டமிருந்தது. பல வரிசைகளில், முதல் முறையாக பார்க்கும் பல தரப்பட்ட முகங்கள். உலகின் அத்தனை மூலைகளில் இருந்தும், தங்களின் கனவு நாடான அமெரிக்காவிற்கு வந்து இறங்கியிருந்தனர். நான் நின்ற வரிசை சற்றே நகர்ந்தது. இருபது மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, நீண்ட வரிசையில் லக்கேஜ்களோடு நிற்பது நிச்சயமாக பெரிய தண்டனை. வயதானவர்களும், நோயாளிகளும் என்ன செய்வார்கள் என்று யோசனை எழுந்தது.

எனது முறை வந்தது. வெள்ளை வெளேரென்று இருந்தவர் தனது கண்ணாடி வழியாக என்னை ஊடுருவிப் பார்த்தபடியே, பாஸ்போர்ட்டிலிருக்கும் எனது படத்தையும் பார்த்தார்.

“What is the purpose of your visit?”

“How long you are going to stay?” என்று சில சம்பிரதாயமான சில கேள்விகளைக் கேட்டார்.

எனது பதிலில் திருப்தி அடைந்தவராக, பாஸ்போர்ட்டில் முத்திரை குத்திவிட்டு, திருப்பிக் கொடுத்தார். நன்றி சொல்லி விட்டு சோதனைகளை முடித்து விட்டு, வாசலுக்கு நடக்க ஆரம்பித்தேன். எல்லாக் கதவுகளும் தானாக விலகி வழிவிட்டது, ஏதோ ஆங்கிலப் படம் போலிருந்தது. வாசலில் ஏராளமான இந்திய முகங்கள். நிறைய டாக்ஸிகள். ஹூஸ்டனில் இந்திய ஜனத்தொகை சற்று அதிகம் தான். இந்தியாவுக்கு சற்றே அருகிலிருந்த தட்பவெப்ப நிலையாக இருக்கலாம்.

முன்பே சொல்லி அனுப்பியபடி, எனது பெயர் தாங்கிய பதாகை வைத்திருந்தவரை நோக்கிச் சென்றேன். கம்பெனி பெயரைச் சொல்லியவுடன், சூட்கேஸ்களை வண்டியின் பின்புறம் வைத்து விட்டு, அமரச் சொன்னார். நன்றாக உடுத்தியிருந்தார். வண்டி அம்சமாக இருந்தது. எல்லாமே லெதர் சீட்டுகள். நல்ல மணம் வந்தது. முதல் முறையாக ஒரு ஆடம்பரமான காரில் பயணம் செய்தேன். மனசு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சில வினாடிகளில் வேகமெடுத்து 59 ஹைவேயில் பறக்க ஆரம்பித்தது. வழியில் ஹுஸ்டன் நகரம், வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்தது. பிரம்மாண்டமான கட்டிடங்கள். காரிலிருந்து முழுமையாக பார்க்க முடியாதபடி உயரமாக இருந்தன.

ஆலன் சகோதரர்களால் 1836-ல் நிர்மாணிக்கப்பட்ட ஹூஸ்டன் நகரம், இடையே கொஞ்ச காலம் டெக்சாஸின் தலைநகரமாகவும் விளங்கியது. 1850-களில் அமைக்கப்பட்ட ரயில் பாதைகள், டெக்சாஸின் பண்ணைப் பொருட்கள் மற்ற இடங்களுக்கும் செல்ல வசதி அமைத்துக் கொடுத்தது. 1900-களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயில், பல ஆயில் நிறுவனங்கள் அமைய வழியமைத்தது.

1914-ல் அமைக்கப்பட்ட ஆழ்நிலை கப்பல் போக்குவரத்துக்கான பாதை, இந்நகரத்தை ஒரு மிகச் சிறந்த துறைமுகமாக மாற்றியது.

1940-களில் நடந்த இரண்டாம் உலகப்போர் உற்பத்தியைப் பெருக்குவதற்கு உதவியது. பெரும்பாலும் ரப்பர்.

1943-ல் அமைக்கப்பட்ட டெக்சாஸ் மெடிக்கல் சென்டர், உலகத்தின் மிகப்பெரிய மெடிக்கல் சென்டராக மாறியது.

1961-ல் நாசா தனது ஜான்சன் விண்வெளி மையத்தை இங்கு அமைத்ததும், ஹுஸ்டன் விண்வெளி நகரமானது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரத்தில் எனது அமெரிக்கப் பயணம் தொடங்குவது எனது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.

இருபது நிமிடங்களுக்குப் பிறகு, இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் சுகர்லேண்ட் என்னும் பகுதியிலிருந்த கிரீண்லேண்ட் அபார்ட்மெண்ட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

நவம்பர் மாதமாக இருந்தாலும், குளிர் ஓரளவுக்கு தாங்கக்கூடிய அளவிலியே இருந்தது. இந்தியாவில் வாங்கிய ஸ்வெட்டர் உதவியது.

வேணு மற்றும் சாம்பசிவம்(சாம்பா) ஆகிய இருவரும் வரவேற்று அழைத்துச் சென்றார்கள். அவர்களுடன் மூன்றாவது ரூம்மேட்டாக தங்கப் போகிறேன் என்று புரிந்தது. இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமிழ் தெரியாது. எனக்கு தெலுங்கு வராது. ஆங்கிலம் தவிர்க்க இயலாத ஒன்றானது. அவர்கள் சமைத்த நூடுல்ஸ்ஸை சாப்பிட்டு விட்டு, களைப்பில் அப்படியே உறங்கி விட்டேன்.

அடுத்த நாள் எழுந்த போதுதான் தெரிந்தது, அது காலையில்லை, மதியம் என்பது. கண்மண் தெரியாமல் தூங்கி இருக்கிறேன்.

முதல் அதிர்ச்சி, பாத்ரூமில் ஹேண்ட் சவர் இல்லை. காகிதம் தான் உருளையில் சுற்றப் பட்டிருந்தது. சற்று அருவருப்பாக இருந்தது. இதற்குப் பழக சற்று காலம் ஆகலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

மீண்டும் நூடுல்ஸ். “முதல் வேளையாக, அபார்ட்மென்ட் அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும்” என்றான் வேணு. சனிக்கிழமை விரைவில் மூடி விடுவார்கள் என்பதால், ஏறக்குறைய ஓடினோம். எனது பாஸ்போர்ட் விவரங்களை பெற்றுக் கொண்டு, சில இடங்களில் கையெழுத்து இடச்சொன்னார்கள். போனும் எஸ்எஸ்எண்ணும் வந்தவுடன், மீண்டும் வந்து அப்டேட் செய்யச் சொன்னார்கள். வெள்ளைக்காரர்கள் நடத்தினாலும், தங்கியிருந்த பெரும்பாலோர் இந்தியர்கள். எங்கள் கம்பனியில் இருந்தே பலரும் தங்கியிருந்தனர்.

பக்கத்தில் இருந்த குரோகர் என்னும் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றோம். நடக்கும் தூரத்திலேயே கடை இருந்தது வசதி. கார் இல்லாததால், நடந்தே சென்றோம்  

ஒரு பெரிய மேட்டை ஏறிக் கடக்க வேண்டியிருந்தது. முதல் முறையாக இவ்வளவு பெரிய கடையைப் பார்த்தேன். ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை பொருட்களும் இருந்தன. இந்தியாவிலிருந்து கொஞ்சம் பணத்தை டாலராக மாற்றிக் கொண்டு வந்திருந்தேன். பார்க்கும் எல்லாப் பொருட்களின் விலையையும் இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றிக் கணக்கிட்டு, தேள் கொட்டியது போல, எடுத்த பொருட்களையெல்லாம் திரும்ப பத்திரமாக அதே இடத்தில் வைத்து விட்டு நகர்ந்து விட்டேன். ஒரு டாலர் 45 ரூபாய். பாங்க் அக்கௌன்ட் வரும் வரை, சமாளிக்க வேண்டும். ரூமுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, பொருட்களை அங்கிருந்த டிராலியில் வைத்துத் தள்ளியபடியே வந்தோம்.

டிராலியை, வாசலில் அதனுடைய இடத்தில் விட்டு விட்டு, பொருட்களைக் கையில் சுமந்து கொண்டு அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தோம். சிலர் டிராலிகளை அபார்ட்மெண்ட் வரையிலும் கொண்டு வந்து, அநாதையாக விட்டுச் சென்றிருந்தனர். கடையின் ஊழியர்கள் அவ்வப்போது வந்து டிராலிகளை எடுத்துச் சென்றனர். இவ்வாறு செய்வது பெரும்பாலும் இந்தியர்களாகவே இருந்தனர்.

வேணுவின் காலிங் கார்டை உபயோகித்து, அபார்ட்மெண்ட் அலுவலகத்தில் இருந்த மஞ்சள் நிற போன் வழியாக, அப்பா மற்றும் அம்மாவிடம் பேசினேன். அழைப்பை சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.

அடுத்த நாள் ஞாயிறு. மிகவும் லேட்டாக எழுந்தோம். ஹுஸ்டன் டவுன்டவுனிலிருக்கும் நலம் உணவு விடுதியில் மதிய உணவு என்பது திட்டம். அதே அபார்ட்மெண்ட்டில் தங்கியிருந்த, வேணுவின் நண்பர் சீனிவாஸ், தனது காரில் அழைத்துச் சென்று வர சம்மதித்தார். அவருக்கு ஆந்திராவில் குண்டூர் பகுதி. அமெரிக்கா வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. கிரீன் கார்டு வைத்திருந்தார்.

பதினோரு மணிக்குக் கிளம்பினோம். அரை மணி நேரத்தில் ஹுஸ்டன் டவுன்டவுன். அமெரிக்கர்கள் பிஸினஸ் சம்பந்தமான பெரும்பாலான அலுவலகங்களை நகரங்களில் அமைத்து, அப்பகுதியை டவுன்டவுன் என்று அழைத்தார்கள்.

அந்த கான்கிரீட் காட்டில், எங்கு பார்த்தாலும் கழுத்தை சுளுக்க வைக்கும், பல உயரமான கட்டிடங்கள். எல்லாமே உருக்கு மற்றும் கண்ணாடியால் ஆன கலவை.

ஹூஸ்டன் ஓபரா ஹவுஸ், டொயோட்டா விளையாட்டுத் திடல், 12 ஏக்கரில் அர்பன் பார்க் மற்றும் மார்க்கெட் ஸ்கொயர் பார்க் ஆகியவற்றுடன் அழகாக காட்சி அளித்தது. அண்டர்கிரௌண்டில் ஆறு மைல் தொலைவுக்கு வாக்வே இருந்தது. ஏகப்பட்ட உணவுக் கடைகள். உலகின் எல்லா நாட்டு உணவு வகைகளும் கிடைத்தது.

நலம் உணவகம் டவுனின் மத்தியப் பகுதியில் இருந்தது. ஒரு தமிழரால் நடத்தப் பட்ட உணவகம், தனது சுவைக்காக, அமெரிக்கா முழுவதும் புகழ் பெற்ற ஒன்றாக இருந்தது.

பெரும்பாலும் ஞாயிறு மதியம் பஃபே அடிப்படையில் இருந்தது. விலைதான் சற்று அதிகம். பதினைந்து டாலர்கள்.

சாலட் மற்றும் வெஜ் கிளியர் சூப்பிலிருந்து ஆரம்பித்தோம். காலையில் சாப்பிடாததால், சரியான பசி. இட்லி, குட்டி மசால் தோசை, வெஜ் பிரியாணி, சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர், வடை, ஊறுகாய், அப்பளம் என அருமையான தமிழ் நாட்டுச் சாப்பாடு. விமானத்தில் இலை, தழைகளை சாப்பிட்டதற்கு, வீட்டு சாப்பாடு போல சுவையாக இருந்தது. ஏராளமான கேக் மற்றும் ஐஸ்கிரீம், பழத்துண்டுகள். ரவுண்டு கட்டி அடித்தோம். எனது பங்கினைக் கொடுக்கையில், சீனி தடுத்து விட்டார்.

பக்கத்திலிருந்த இந்திய பலசரக்குக் கடையில், குவார்ட்டர்(25 காசு நாணயம்) கொண்ட கட்டுகள் மற்றும் காலிங் கார்டுகள் வாங்கிக் கொண்டேன். வேணு ஊறுகாய் மற்றும் பொடிகள் வாங்கினார்.

திரும்புகையில் வண்டியில் தூங்கியபடியே வந்தேன். அபார்ட்மெண்ட்டுக்கு வந்தவுடன், அவருக்கு நன்றி சொல்லி விட்டு, தூங்க ஆரம்பித்தோம். அடித்துப் போட்ட மாதிரி தூங்கி விட்டு, மாலை ஆறு மணியளவில் எழுந்தேன்.

எல்லொருக்கும் ஞாயிறன்று துணி துவைக்கும் வைபவம். துவைக்கும் அளவுக்கு என்னிடம் எதுவும் இல்லை. வேணுவுடன் அபார்ட்மெண்ட் வளாகத்தில் இருந்த துணி துவைக்கும் இடத்திற்குச் சென்றேன். ஏகப்பட்ட இயந்திரங்கள். எல்லாமே காயின் போட்டால் துவைக்கும் இயந்திரங்கள். துவைத்து அதுவே உலர்த்தியும் கொடுப்பதால், வேலை எளிது.

நாற்பத்தைந்து நிமிடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல், அபார்ட்மெண்ட் வளாகத்தில் இருந்த, ஜிம்மிற்குச் சென்றோம். டிரெட் மில் என்னும் ஓடும் இயந்திரங்கள் நிறைய இருந்தன. சைக்கிளிங் மற்றும் வெயிட் லிப்டிங் இயந்திரங்கள் சிலவும் இருந்தன. பழக்கமில்லாததால், டிரெட் மில்லில் நடப்பதே சிரமமாக இருந்தது. சிலர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தனர். அரை மணிநேரத்தில் மீண்டும் துணி துவைக்கும் இடம். துணிகளை அதற்குரிய பையிலிட்டு எடுத்துக் கொண்டு, அறைக்கு வந்து சேர்ந்தோம்.

இரவு உணவிற்கு உப்புமாவும், ஆம்லெட்டும். தேவையான வேலைகளைச் செய்தபடியே எனது வேலை சார்ந்த அனுபவங்களை கேட்டபடியே இருந்தார் சாம்பா. நானும் வெள்ளந்தியாக எனது வேலை சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். என்ஜினீயரிங் முடித்து விட்டு, யுபிஎஸ் சர்வீஸ், பிறகு மென்பொருள் சொல்லித்தரும் ஆசிரியர் பணி, இறுதியாக ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் ஆறு மாதங்களாக டெவலப்பர் வேலை என எல்லாவற்றையும் கதையைப் போலச் சொன்னேன்.

அடுத்த நாள் கம்பெனி அலுவலகம் சென்றோம். நடந்து செல்லும் தூரத்தில் இருந்ததால், வசதியாக இருந்தது.

கம்பெனிக்கு ராஜ், ரங்கா என்று இரண்டு உரிமையாளர்கள். நாங்கள் சென்ற போது, இருவருமே தங்களது அறையில் இருந்து வெளியே வந்து, அனைவருடனும் காபி அருந்திக் கொண்டிருந்தார்கள். ராஜ் சுமாரான உயரமும், சுருட்டை முடியும், இறுக்கமான முகமும் கொண்ட, கறாரான மனிதராகத் தெரிந்தார். ரங்கா தனது கைகளில் எலுமிச்சை நிற டென்னிஸ் பந்து போன்ற ஒன்றை வைத்து நசுக்கியபடியே பேசினார். ஐந்தரை அடி உயரம், கேசுவலான உடை, ஜாலியான, பிரண்ட்லியான தோற்றம். பார்த்ததுமே எனக்கு ரங்காவைப் பிடித்து விட்டது.

எனது வேலை அனுபவங்கள் மற்றும் குடும்பம் பற்றி சற்று நேரம் பேசினோம். ரங்கா வேணுவை அழைத்து, ”நாளைக்கு இவரை அழைத்துச் சென்று எஸ்எஸ்என் அப்ளை பண்ணிடு. அப்படியே பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செஞ்சி கொடுத்துடு. என்னோட ஃபோர்டு கார எடுத்துக்கோ” என்றார்.

அடுத்த நாள் சற்று நேரமாக எழுந்து தயாராகி விட்டேன். எங்களுக்கு அருகிலிருந்த எஸ்எஸ்என் அலுவலுகம் வெஸ்ட்கீமர் ரோட்டில் இருந்தது. அபார்ட்மெண்ட்டிலிருந்து பதிமூன்று மைல் தொலைவு. கொஞ்ச தூரம் சென்றதும், ஐ-69 பிடித்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு அலுவலகத்தை வந்தடைந்தோம். முன்னரே போனில் பதிவு செய்து விட்டு வந்திருக்கலாம். நீண்ட வரிசையில் காத்திருந்தோம். SS-5 படிவத்துடன் எனது கடவுச்சீட்டு மற்றும் ஐ-94, விசா ஆகியவற்றைக் காண்பித்து அப்ளை செய்தேன். இரண்டு வாரங்களில் வீட்டு முகவரிக்கு வந்து விடும் என்றார் கவுண்ட்டரிலிருந்த பெண்மணி. இந்த அடையாள அட்டை இலவசம் என்பது ஆச்சரியமான விஷயம். ஒரு முக்கியமான வேலை முடிந்த சந்தோஷம் எனக்கு. வேணுவுக்கு நன்றி சொன்னேன். மதியத்திற்குள் திரும்பி விட்டோம்.

அடுத்த முக்கியமான வேலை வங்கிக் கணக்கு. அபார்ட்மெண்ட்டுக்கு அருகிலிருந்தால் நல்லது. நடந்தே சென்று விடலாம். அதனால் அருகிலிருந்த பர்ஸ்ட் ஹாரிசன் பேங்க்கில் சேமிப்புக் கணக்கு தொடங்கச் சென்றிருந்தேன். எனது கடவுச்சீட்டு மற்றும் ஐ-94, விசா ஆகியவற்றைக் காண்பித்தேன். எஸ்எஸ்என் வந்தவுடன் ஜெராக்ஸ் காப்பி சமர்ப்பித்து விடுகிறேன் என்று சொல்லி வங்கிக் கணக்கு ஆரம்பித்து விட்டேன். டெபிட் கார்டு மற்றும் செக் புக் ஒரு வாரத்தில் வந்துவிடுமென்று சொன்னார் கவுண்டரில் இருந்த வெள்ளையர்.

இரண்டு வேலைகள் முடிந்ததால் அன்றைய தினம் மிகவும் சந்தோசமாகக் கழிந்தது.

அடுத்து என் முன் நின்ற சவால் டிரைவிங் லைசென்ஸ். சைக்கிளைத் தவிர வேறேதும் ஓட்டாதவன், நேரடியாகக் கார் லைசென்ஸ் வாங்கப் போகிறேன் என்பதே பெரிய சவாலாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது.

என்னைப் போன்று புதிதாக அமெரிக்கா வந்தவர்கள் அபார்ட்மெண்ட்டில் கணிசமாக இருந்தனர். அனைவருக்கும் இது ஒரு சவாலாகவே இருந்தது. இந்திய லைசென்ஸ் உரிமம் சில மாநிலங்களில், அதுவும் சில மாதங்களுக்கு வேலிட் ஆக இருந்தது.

இதற்கென்றே டிரைவிங் பள்ளிகள் நடத்தும், இந்திய வட மாநிலத்தவர்கள் இருந்தனர். வலதுபுறம் ஓட்ட வேண்டும் என்பதும், தவறு செய்தால் மிகக் கடுமையான தண்டனைகளும் இருந்ததால், லைசென்ஸ் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் மிகவும் அவசியமான ஒன்று. எல்லா இடங்களிலும் லைசென்ஸ் ஒரு அடையாள அட்டையாக இருந்தது. அதுவுமில்லாமல் கார் இல்லாமல், எதுவும் செய்ய முடியாது என்பதே கசப்பான உண்மை.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் மேலாக டிரைவிங் கற்றுக் கொண்டேன். பல டிரைவர்கள் ஒரு இடத்தில் அசெம்பிள் ஆவார்கள்.மாணவர்களை அழைத்துக் கொண்டு, ஒரு தூரப் பயணம். அதிக டிராஃபிக் இல்லாத ஏதோ ஒரு ஹைவேயுக்கு அழைத்துச் சென்று, காரை ஓட்டச் சொல்வார்கள். ஒருவருக்கு பதினைந்து நிமிடங்கள் கிடைக்கும். நேராக ஓட்டுவோம். ஓட்டி முடித்தவுடன் அவர் பின்னால் அமர, அடுத்தவர். குறைவான நேரமே ஓட்டுவதால், எனக்கு தடுமாற்றமாகவே இருந்தது. அதிகமாகத் தவறுகள் செய்தேன். திட்டு வாங்கினேன். ஒரு மணி நேரத்திற்கு முப்பது டாலர்கள். மிகவும் விலை அதிகமான ஒரு பயிற்சி.

கம்பெனியிலிருந்து எல்லோருக்கும் ஒரு சம்பள அட்வான்ஸ் கொடுத்து இருந்ததால் சமாளிக்க முடிந்தது. ஒரு மாதம் கழித்து, எனக்குப் பயிற்சி அளித்த ஓட்டுநர் ஒரு வழியாக ஆறு மைல் தொலைவில் கெஸ்னர் ரோட்டில் இருந்த, டிரைவிங் லைசென்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

எனக்கு மிகவும் பயமாக இருந்தது. கைகால்கள் நடுங்கின. சில ஃபார்ம்களை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்திய பிறகு, ஓட்ட வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

டிரைவிங் இன்ஸ்பெக்டர் ஐம்பது வயது மதிக்கத்தக்க வெள்ளையர். கனமான குரலில்,”how are you doing today?” என்றார்.

“Doing good. Thanks” என்று சொல்லி விட்டு, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஸ்டியரிங் வீலைப் பிடித்தேன்.

இதயம் வெளியே வந்து விடுமளவுக்கு வேகமாக துடித்தது  எல்லா கண்ணாடிகளையும் பார்த்து விட்டு, வண்டியை எடுத்தேன். மிக மிக மெதுவாக ஓட்டினேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, திடீரென ஹைவேயில் ஓட்டச் சொன்னார். வேகமும் அதிகம். மெதுவாக ஓட்டினால், பின்னால் வருபவர்கள் இடித்து விடுவார்களோ என்று பயம். திடீரென அவர் தனது காலடியில் இருந்த பிரேக்கை அழுத்தினார். இல்லையெனில் இடித்திருப்பேன். அப்போது எனக்கு ரிசல்ட் தெரிந்து விட்டது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஆரம்பித்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ரிவர்ஸ் எடுத்து சரியாக பார்க்கிங் செய்வது மிகப் பெரிய சவால். இறங்கியவுடன் வலதுகை கட்டை விரலை கீழே காட்டி, “Fail” என்றார்.

இந்த ஒரு மாதமும் வேலை சார்ந்த இன்டர்வியூக்கு தயாராவதில் கழிந்தது. எஸ்எஸ்என் கைக்குக் கிடைத்தது. பேங்க்கிலிருந்து டெபிட் கார்டு மற்றும் செக் புக் வந்து சேர்ந்தது. ஒரு பெரிய சாதனை என்று மனசு சந்தோஷப் பட்டது. வார இறுதிகளில் காலிங் கார்டு வழியாக அப்பா, அம்மாவிடம் பேசினேன்.வேலை எப்போது கிடைக்கும் என்பதே அப்பாவின் கவலையாக இருந்தது.

பக்கத்தில் இருந்த சில உணவகங்களில் சாப்பிட்டோம். மெக்டொனால்ட்டில் வெஜ் பர்கர் கிடைக்கவில்லை. உள்ளிருந்த பேட்டியை எடுத்து குப்பையில் வீசி விட்டு, வெறும் பன்னை சாப்பிட்டேன். பெரும்பாலும் பிரெஞ்ச் பிரைஸ் மற்றும் கோக் சற்று ஆறுதலாக இருந்தது. சப்வேயில் உண்பது முதலில் மிகவும் கடினமாக இருந்தது. வெறும் பன்னையும் இலை, தழைகளையும் உண்பது போலிருந்தது. போகப் போக பழகி விட்டது.

ஒரு வார இறுதியில் நண்பர்கள் பியர்லேண்டிலிருந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லலாம் என்று முடிவானது. இந்த முறையும் சீனிவாஸ்தான் உதவினார். அவருடைய காரில் ஞாயிறன்று காலை பதினோரு மணிக்குக் கிளம்பினோம். அங்கிருந்து 27 மைல்கள், 40 நிமிடங்கள். மேப்பை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டோம். I-69, highway no.6 south எடுத்து, முப்பது நிமிடங்களிலேயே வந்து சேர்ந்தோம். மிகவும் பெரிய, பிரபலமான கோயில். சிறப்பான தரிசனம். கேண்டீனில் மிளகாய் பஜ்ஜி, தயிர் வடை, பூரி என்று நிறைய சாப்பிட்டோம். நிறைய அழகான இந்திய முகங்களைக் காண முடிந்தது. சற்று நேரம் கோயிலைச் சுற்றி விட்டு, அங்கிருந்து கிளம்பினோம். அடுத்த நாள் காலை ஹுஸ்டன் டவுன் டவுனில் இருந்த ஒரு கம்பெனியில் நேர்காணல் இருந்தது.

வேணுவுக்கு வேறு ஒரு கிளையண்ட் உறுதியாகி இருந்தது. நானும் சாம்பாவும் மற்றும் வேறு ஒரு பெண்ணும் சேர்ந்து சென்றோம். பேருந்திலேயே செல்ல முடிவெடுத்து, காலையில் நேரமாக எழுந்து தயாராகி பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றோம். தங்கியிருந்த இடத்திலிருந்து குறைவான பேருந்துகளே இருந்தன. குவார்ட்டர் என அழைக்கப்படும் 25 காசு நாணயம் போட்டு, டிரான்ஸ்ஃபர் டிக்கெட் எடுத்துக் கொண்டு, வேடிக்கை பார்த்தபடி பயணம் செய்து, அரைமணி நேரத்தில் ஹுஸ்டன் டவுன்டவுன் அடைந்தோம். நாங்கள் செல்ல வேண்டிய கம்பெனி அருகிலேயே பேருந்து நிறுத்தம் இருந்ததால், அதிகமாக நடக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

கண்ணாடியால் வேயப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் எலிவேட்டரில் சென்று, ரிசப்ஷனில் இருந்த இந்தியப் பெண்ணிடம் விவரங்கள் தெரிவித்த பிறகு, அழைப்பிற்காக காத்திருந்தோம். மூவரும் ஒவ்வொருவராக அழைக்கப் பட்டோம். எனது முறை வந்தவுடன் உள்ளே சென்றேன். இரண்டு மத்திம வயதுடைய இந்தியர்கள் கோட்,  டையுடன் அமர்ந்திருந்தனர். பெரும்பாலான கேள்விகள் விஷுவல் பேசிக் என்னும் மென்பொருளில் எனது அனுபவம் பற்றியே இருந்தது. அதையே இரண்டு வருடங்கள் சொல்லிக் கொடுத்ததால், எல்லாக் கேள்விகளுக்கும் தடையின்றி பதில் சொன்னேன். இரண்டு நாட்களில் பதில் சொல்வதாக, ரிசப்ஷன் பெண் சொன்னாள். மதியம் அருகிலிருந்த இந்திய உணவகத்தில் மதிய உணவு முடித்து விட்டு, பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். எங்களின் அதிர்ஷ்டம் காரணமாக, சற்று நேரத்தில் பேருந்து வந்தது. எங்கள் நேர்காணல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் மூவரையும், ராஜ் அழைப்பதாகச் சொன்னதால், எங்கள் கம்பெனி அலுவலகம் சென்றோம். ராஜ் மட்டுமே இருந்தார். ரங்காவைக் காணவில்லை.

ராஜ் எங்கள் மூவரையும் அவரது அறைக்கு அழைத்துப் பேசினார்.

என்னைப் பார்த்து “How come they selected you?. You are not a fit for the position. Looks like, you don’t have any hands on experience. I am not going to send you” என்றார்.

அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது.

எங்கள் அறையில் நான் பகிர்ந்து கொண்ட அனைத்து விஷயங்களும் ராஜிக்குத் தெரிந்திருந்தது. அனைவருக்கும் முன்பு இவ்வாறு பேசியதால், அவமானத்தால் சுருங்கிப் போனேன். ஏசி அறையில் வேர்த்துக் கொட்டியது. என்னை வெளியே அனுப்பி விட்டு, மற்ற இருவருரிடமும் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார். சற்று நேரத்தில், நான் அறைக்கு வந்து விட்டேன்.

அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிந்தேன். அடுத்த நாள் காலை வழக்கம்போல கம்பெனிக்கு, நானும் சாம்பாவும் சென்றோம். மீண்டும் அடுத்த நேர்காணல் எப்போது கிடைக்குமோ என்ற கவலை இருவரிடமும் இருந்தது

ராஜ் வெளியே வந்து , என்னை வரச் சொன்னார். ராஜ் மற்றும் ரங்கா இருவரும் அறையில் இருந்தனர். ராஜ் தெளிவான தமிழில், உறுதியான குரலில் பேசினார்: “இன்னும் ஒரு வாரம் டைம் தர்றோம். விசாவைக் கேன்சல் செய்யப் போறோம். தயாரா இருங்க”. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தரை நழுவியது. தலை சுற்ற ஆரம்பித்தது. என்னையே பிடித்து இழுத்துக் கொண்டு, “சார், இன்னும் ஒரு சான்ஸ் குடுங்க. நிச்சயம் கத்துக்குவன். தியரி நல்லா வரும். இரண்டு சின்ன புராஜக்ட் இங்கேயேப் பண்றேன். கொஞ்சம் உதவி பண்ணுங்க. அப்பா, அம்மா ரொம்ப எதிர்பார்க்கறாங்க” என்றேன் அழுகையை அடக்கியபடி.

“இல்லிங்க. நாங்க முடிவு செஞ்சிட்டம். நீங்க இந்தியா திரும்பிப் போனதுதான் பெஸ்ட் ஆப்ஷன்” என்றார் ரங்கா.

எழுந்து இருவரிடமும் கை குலுக்கி விட்டு வெளியே வந்தேன். சாம்பாவுக்கும் அதிர்ச்சி.

அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. சாவியை வாங்கிக் கொண்டு, அறைக்கு வந்து சேர்ந்தேன். ஏதோதோ எண்ணங்கள் மனதில் ஓடின. அப்பா, அம்மாவிடம் எப்படி சொல்வது? மீண்டும் அனைவரின் முகத்திலும் எப்படி விழிப்பது? அன்றிரவு முழுவதும் கண்களுக்கு ஓய்வின்றி அழுது கொண்டே இருந்தேன்.

 

You Might Also Like

‘தாக்கத்தின் விளைவுகள்தான் எழுத்து’ – எழுத்தாளர் மகி ஆதிரன்
நிஸ்வா என்றொரு பழமையான நகரம்… நிஸ்வா – பகுதி 1
கடல் பிரசவித்த குகையும், மலையும்!!!  நிஸ்வா – பகுதி 10
பகுதி 4: நட்சத்திர சாட்சி – சிலேடையில் சிக்கிய சோழம்
சிலோன் வைத்தியர்
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்விண்மீன் செப்டம்பர் 2026
Previous Article சாலமன் பாப்பையா
Next Article எது நகைச்சுவை?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (17) கட்டுரைகள் (29) கவிதைகள் (36) குறுநாவல் (1) சிறுகதைகள் (92) திரைப் பார்வை (13) தொடர்கள் (26) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (16) புத்தகப் பார்வை (43) விண்மீன் மின்னிதழ் (17)

பதிவுகள்

  • November 20265
  • October 202619
  • September 202613
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?