‘சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே
அடுத்தவங்கள சந்தோசப்படுத்துறது தான்’ இதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இதற்கு
உண்மையான அர்த்தம் என்ன? மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது அல்லது அவர்களுக்கு ஒரு
தேவை இருக்கும் போது உதவி செய்வது என்பது தான். அல்லது நாமாகவே ஆசைப்பட்டு அவர்களுக்கு
உதவுவது, பரிசளிப்பது என்பதுவும் இதில் அடங்கும். அப்போது நாம் உதவி செய்பவர்கள் சந்தோஷப்படும்
போது நம் மனதும் மகிழ்ச்சி அடையும். ஒரு நல்ல மனநிலை உருவாகும். இதை அன்பு, கருணை,
உதவி என்று வைத்துக் கொள்ளலாம்.
இதைத்தவிர இன்னொன்றும் உண்டு.
அடுத்தவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் நிறைவேறறுவது, அதன் மூலம் அவர்களை மகிழ்விப்பது.
அடுத்தவர் தேவைக்காக அல்ல, தனிப்பட்ட விருப்பத்திற்காக. அதனால் உங்களுக்கு மனதளவில்
அதிருப்தி ஏற்பட்ட போதிலும் அதை தியாகம் என்று சமாதானப்படுத்திக் கொள்வது.
அடுத்தவர்களுக்கு பிடிக்கும்
என்பதற்காக செய்யும் ஒரு காரியம் உங்கள் மனதுக்கும் மகிழ்ச்சிச்சியை தரவேண்டும். அதனால்
உங்களுக்கு சில inconvenience மற்றும் சங்கடங்கள் வந்தாலும் மனதளவில் நீங்கள் ஒரு திருப்தியை
உணர வேண்டும். இது தான் win win situation. இரு புறமும் வெற்றி.
சரி அப்படியானால் இரண்டிற்கும்
என்ன வேறுபாடு? இதில் ஒரு குழப்பமும் தேவை இல்லை. எந்த ஒரு காரியத்தையும் அடுத்தவர்களுக்காக
செய்யும் போது உங்கள் மனதிற்கு எதாவது ஒரு நெருடல் இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி
நீங்கள் discomfort ஆக உணர்ந்தால் அது கண்டிப்பாக தேவை இல்லாத ஆணியே தான்! உங்களை விட
யாரும் இந்த உலகில் முக்கியம் இல்லை. குடும்பம், உறவுகள், நண்பர்கள் கண்டிப்பாக முக்கியம்
தான் ஆனால் அதுக்கும் முன்னர் ‘நீங்கள்’ உங்களுக்கு முக்கியம். இன்னும் சுத்தி வளைத்து
சொல்வதானால் அடுத்தவங்களுக்கு உதவவாவது நீங்கள் நன்றாக ஆரோக்கியமான உடல் மற்றும் மனதோடு
இருக்க வேண்டுமல்லவா? சுவர் இருந்தால் தானே சித்திரம்!
அதற்காக யாருக்கும் எதுவும்
செய்யக்கூடாது என்பதில்லை. சிலர் தனக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, கூட இருப்பவர்களின்
நலனை இரண்டாம் பட்சமாக கருதுவார்கள். தனக்குப் போகத்தான் எதுவும் என்று சுயநலமாக நடப்பர்.
அது அளவுக்கு அதிகமாக தன்னை, தன் சுயத்தை முன்னிலை படுத்துவது. அது திருத்தப்பட வேண்டிய
விடயம்.
இதுவோ தேவையான, அதிமுக்கியமான
விஷயங்களில் கூட தன் நலனை குறைத்து மதிப்பிட்டு மற்றவர்களின் தேவைக்கு, மன நிலைக்கு,
மன நிம்மதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது. அதன் மூலம் தன் நிம்மதியை இழப்பது.
இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ஒரு சிறு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு ஆசிரியர் ஆளுக்கொரு பலூன் குடுத்து ஊதச்சொல்லி ஒவ்வொருவரின் பெயரையும் எழுதச் சொல்கிறார்.
பின்பு அத்தனை பலூன்களையும் அறையில் போட்டுவிட்டு இப்போது அவரவர் பெயர் எழுதப்பட்டதை
எடுக்கச் சொல்கிறார். எல்லோரும் தேட ஆரம்பித்தனர். கடைசி வரை ஒருவருக்கும் கண்டுபிடிக்க
முடியவில்லை. ஆசிரியர் அனைவரையும் நிறுத்தச் சொல்லிவிட்டு, இப்போது ஒரு பலூனை எடுத்துப்
பார்த்து அதில் யார் பெயர் இருக்கிறதோ அவரிடம் குடுக்கச் சொல்கிறார். சிறிது நேரத்திலேயே
அனைவரிடமும் அவரவர் பெயர் எழுதப்பட்ட பலூன்கள் கிடைத்து விடுகிறது.
ஆசிரியர் ‘அந்த பலூன்கள் தான்
மகிழ்ச்சி. நம்முடைய சந்தோசத்தை மட்டுமே தேடிக்கொண்டிருந்தால் ஒரு போதும் கிடைக்காது.
பிறர் மீது அக்கறை கொண்டால் சந்தோசம் நம்மை வந்தடையும்’ என்றார்.
இந்தக்கதையில் எந்தவித குழப்பமும்
இல்லை. அதனால் எல்லாம் சுபம். இதே கதையில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனிடம் எனக்கு உன்னுடைய
இந்த நீல நிற பலூன் தான் வேண்டும் என்று வற்புறுத்துவதாக வைத்துக் கொள்வோம். அல்லது
அந்த பெரிய பலூன் தான் வேண்டும் என்று கேட்டால் என்ன செய்வது? அதை வைத்திருக்கும் மாணவனுக்கும்
அந்த நீல நிற பலூன் பிடித்திருந்தால்?! கேட்ட மாணவன் நெருங்கிய தோழனாக இருந்தால் இவனே
ஆசையாக கொடுத்து விடலாம். அப்படியானால் எதிர்மறைக்கு இடமில்லை. அப்படி இல்லாமல் இவனுக்கு
கொடுக்கவும் மனதில்லை எனில் என்ன செய்வது? கொடுக்கத் தேவை இல்லை.
அப்படிக் எதாவது அழுத்தத்தில்
கொடுத்தால், அது கண்டிப்பாக கருணை, விட்டுக்கொடுத்தல், அன்பு என்ற எந்தத் தலைப்பின்
கீழும் வராது. சுயத்தைக் கைவிடுதல் என்றுதான் பொருள். அதாவது புரியும்படி சொல்வதானால்,
உங்களை நீங்களே நடுத் தெருவில் அம்போவென்று விட்டுவிடீர்கள்.
ஏழை வீட்டு அடுப்பெரிய விறகாவது
மனிதம், புனிதம். அடுத்தவன் பிக்கினிக் பார்பிக்யூவிற்கு விறகாவதை என்னவென்று சொல்வது?
நீங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும்
மகிழ்வியுங்கள்! அடுத்தவர்களை மகிழ்விக்க உங்கள் மன நலனை நிராகரிப்பது, உங்களுக்கு
நீங்களே செய்யும் துரோகமே தவிர வேறென்ன? தொடர்ந்து இதே போல் ஈடுபடும் போது காலப்போக்கில்
அதுவே அடுத்தவர் மீது மனக்கசப்பாக மாறி விடும். அதாவது யாருக்காக பார்த்து பார்த்து
ஒவ்வொன்றாக செய்தீர்களோ அவர்கள் மீதே கடைசியில் வெறுப்பு தோன்றும். இது தேவையா? என்று
யோசிக்க வேண்டும்.
எப்படி திடீரென்று யாராவது
உதவி கேட்கும்போது செய்யாமல் இருப்பது? எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று எப்படி சொல்வது?
(அட, வேறு வேலையே இல்லாவிட்டாலும் தான் என்ன? இதை செய்வதில் அவ்வளவு நாட்டமில்லை என்று
சொல்லத் தயக்கமே தேவையில்லை!) அப்படிச் சொன்னால் ஏதும் நம்மை தவறாக எடுத்துக் கொள்வார்களோ?
மனதில். இப்படிப் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கும். அது, அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கட்டும்.
அப்படியானால் முதலில் செய்ய
வேண்டியது என்ன? முதலில் சின்னச் சின்ன அடியாக எடுத்து வைக்கலாம். ரொம்ப நாட்களாக எதாவது
ஒரு விஷயம் ஆசைப்பட்டிருப்போம் ஆனால் அதை செய்யாமலேயே காலம் கடத்திக் கொண்டிருப்போம்.
அதை ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பிக்கலாம். அது ஒன்றும் நாம் நினைக்கும் அளவிற்கு கடினமானதாக
இருக்காது. எளிதான ஒன்று தான்.
பல நாட்களாக, இல்லை, மாதங்களாக
பார்க்க வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த பழைய நண்பனை/ தோழியை பார்க்க போவது,
ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் ஆடையை, யாரு வீட்டிலாவது விஷேசம் வருமா என்று எதிர்பார்த்தே
உடுத்தாமல் வைத்திருப்பீர்களே, அந்த ஆடையை அணியுங்கள்.. இதோ இன்றே உங்கள் வீட்டிலேயே
விஷேசம் போல் உணர்வீர்கள். வெயிலில் பைக்கில் போய்க் கொண்டிருக்கிறீர்கள்… ஒரு கரும்புச்சாறு
கடையைத் தாண்டும் போது மனது நிற்க சொல்லும்… ஆனால் நாம் அதை கண்டுகொள்ளாமல் எதற்கு
தேவையில்லாமல் இன்னும் கொஞ்ச நேரத்தில் சேரும் இடம் வந்து விடுமென்று மனதை அடக்கி விடுவோம்.
சிறுவராய் இருந்த போது அடக்கப்பட்டது போலவே. அதற்கு மாறாக பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு
ஒரு கிளாஸ் கரும்புச்சாறு வாங்கி ஒரு மிடறு குடித்துப்பாருங்களேன்..! ஒரு மிடர் தொண்டையில்
இறங்கும் போது உணரும் ஒரு குளிர்ச்சி… வேறொன்றும் இல்லை. இவ்வளவு எளிதானது தான்,
நம்மை நாமே அக்கறையாய் பார்த்துக் கொள்வதென்பது!
பார்த்துக் கொள்வோமா?
சுவருக்கு முதலில் வெள்ளை
அடிப்போம் ; சித்திரம் காத்திருக்கும்.


