VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: கதை சொல்லப்போறேன்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > கதை சொல்லப்போறேன்
சிறுகதைகள்

கதை சொல்லப்போறேன்

“சார், பான் இண்டியா படம்னா… வந்து பிரமாண்டமாவா?”

அப்பு சிவா
Last updated: May 28, 2026 12:43 pm
Share
12 Min Read
கதை சொல்லப்போறேன்
SHARE

கதை சொல்லப்போறேன்

–      அப்புசிவா,

ஆத்தூர்

 

            கையில் இருந்த ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ திரைக்கதைப் பிரதியை மீண்டும் ஒரு முறை புரட்டினான் வெற்றி.

 

            அதுதான் அவனது சினிமா ஆசையின் மூல ஆதாரம். எத்தனை தடவை படித்திருப்பான், அந்த படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பான் என்பதை எண்ணவே முடியாது. அதன் எதிரொலியாகத்தான் தன் முதல் குறும்படத்தை எடுத்தான். பிரபல தொலைகாட்சி சேனலில் சிறந்த குறும்பட இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டான். சிலபல மீடியா பேட்டிகளில் பேசினான். தற்போது பிரபல தயாரிப்பாளரான ஜேகேடியின் அழைப்பின் பேரில் கதை சொல்ல வந்து காத்துக்கொண்டிருக்கிறான்.

 

            பெரிய அலுவலகம் அது. அதன் பிரமாண்டம் மலைக்கச்செய்தது. ரிஷப்சன் பெண்ணின் அலட்சியம் அவனை எதுவோ செய்தது. ‘தவறில்லை, தன்னைப்போல தினமும் எத்தனை பேரை பார்த்திருப்பாள்’ என்பதும் உரைத்தது. அரைமணி நேர காத்திருப்பின் பின் அந்த ஆள் வந்தார்.

 

            “மிஸ்டர் வெற்றி?” லேசான வழுக்கை, லேசான தொப்பை, இன் செய்திருந்தார். ஐம்பது வயது இருக்கலாம்.

 

            “ஆமா சார்” என்று எழுந்தான்.

 

            “வாங்க, நான் சாரோட பிஏ. மகேந்திரன். சார் உங்களை உள்ள காத்திருக்கச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் வந்துடுவார்” என்றவர் ரிஷப்சனிஸ்ட்டிடம் திரும்பி, “சார் பிரபல குறும்பட இயக்குநர், ரொம்ப ஃபேமஸ்… நீ அந்த படம் பாத்திருக்கியா?” என்றார்.

 

            “இல்ல சார், யார் ஹீரோவா நடிச்சாங்க?” என்றாள்.

 

            அவளுக்கு எதுவும் பதில் சொல்லாமல் வெற்றியுடன் அந்த அறைக்குள் நுழைந்து உட்காரச்சொன்னார் மகேந்திரன். அழகிய அறை. ஆஜானுபாகுவான காட்பாதர் டைப் சேர். அதுதான் ஜேகேடியின் சீட் என்பது புரிந்தது. பின்னணியில் நிறைய ஷீல்டுகள், சுவர்களில் சார்லி சாப்ளின், என்எஸ்கே, எம்.ஆர்.ராதா புகைப்படங்கள்.

 

            “சுத்த மக்கு அந்தப் பொண்ணு, என்ன படம் பிடிக்கும்னா பாடாவதி படத்தை சொல்லி பாராபாராவா பேசும்” என்று சொல்லி சிரித்தார். வெற்றியும் அளவாக  சிரித்து வைத்தான்.

 

            “அப்புறம்? என்ன மாதிரியான கதையை செலக்ட் பண்ணியிருக்கீங்க? நீங்களே கதையா? இல்லை யாராவது கதாசிரியர் இருக்காங்களா”  கேட்டார் மகேந்திரன். அப்படியே அருகே இருந்த இண்டர்காம் எடுத்து காஃபி எடுத்துவரச் சொன்னார்.

 

            “அய்யோ, இல்லல்ல சார், என் சொந்த கதைதான்” என்றான் வெற்றி பதட்டமாக.

 

            அவனின் பதட்டத்தை கவனித்த மகேந்திரன் சொன்னார்,        “இதுக்கேன் இவ்ளோ பதட்டம்? உங்களுக்கு கதை எழுத வந்தா ஒகேதான். புதுசா வரவங்க எப்பவும் தனக்குன்னு ஒரு கதையை ரெடி செஞ்சுட்டுதான் டைரக்சனுக்குள்ள இறங்குவாங்க. ஆனா பாருங்க, கதை எழுதுவது வேற, திரைக்கதை வேற… இதையெல்லாம் திரையில் கொண்டு வரும் டைரக்சன் வேறதான். இதை நெறய பேரு புரிஞ்சுக்கிறதில்லை. உலகப் புகழ்பெற்ற பல படங்களோட கதாசிரியர் வேறதான் தெரியுமா?” என்று சிரித்தார்.

 

            சற்றே விபரமானவர் என்பது புரிந்து மெல்ல சிரித்தான் வெற்றி.

 

            காஃபி வந்தது. அருமையான காஃபி. அருந்தியபடி பேசினார் மகேந்திரன்.

 

            “கதையை சொல்றீங்களா? கட்டாயமில்லை. ஆனா சார் வரும்போது அவர்கிட்ட சொல்ல உங்களுக்கு ஒரு ட்ரையல் மாதிரி இருக்கும்ல, இஷ்டம் இல்லைன்னா வேணா”

 

            “அச்சோ, சொல்றேன் சார்…”

 

            “ம்”

 

            “ஒரு கிராமம் சார், ஒரு சின்ன பையன். படிக்கவே சிரமம். கிழிஞ்ச யூனிஃபார்ம்தான். அவனுக்கு ஒரு ஆசை. புது சட்டை வாங்கி போடணும்னு”

 

            “சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன் போல இருக்கே…”

 

            “இல்ல சார், இது நம்ம ஊரு கதை. வேற மாதிரி போகும். அவனோட ஏழ்மையை படிப்படியா பதிய வைக்கிறோம். அப்புறம் அவங்க குடும்பத்துக்கு ஒரு வாய்ப்பு வருது. அதிலே நிறைய சவால்கள், ஏமாற்றங்கள், அவங்க அப்பா சந்திக்கும் துரோகங்கள்… கடைசியா ஜெயிக்கிறாங்க”

 

            “உங்க கையில் இருக்கிற புக் பாக்கும்போதே நினைச்சேன். அதே கதைதான். ஆனா முடிவு சுபமா முடிக்கிறீங்க”

 

            “கொஞ்சம் கொஞ்சம் தழுவல் சார். அதாவது சாயல்தான். காப்பி இல்லை. ஆனா கதை முழுக்க எங்க கிராமத்தில் பார்த்த சம்பவங்கள், நிகழ்வுகள் எல்லாமே வரும். முக்கியமா ஒரு சீன் கூட போரடிக்காம அழகா வேகமா போகும். அடுத்து என்ன என்னன்னு சீட் எட்ஜ் மூவி  நகர்வதைப்போல ஸ்கிரீன்ப்ளே பண்ணியிருக்கேன்”

 

            “குட், அதான் அழகு” என்றவர், கதவு திறக்கும் சத்தம் கேட்டு பதறி எழுந்தார்.  வெள்ளை சட்டை, கருநீல சூட் உடன் உள்ளே நுழைந்தார் ஜேகேடி. புகைப்படங்களில் பார்த்ததைவிட சிவப்பாக இருந்தார். அதைவிட குண்டாக இருந்தார். கூடவே இரண்டு இளைஞர்களும் நுழைந்தனர். வெற்றி எழ முனைய, அவன் தோளைத்தொட்டு உட்கார வைத்து, தன் ஆஜானுபாகுவான சீட்டில் ஆரோகணித்தார் ஜேகேடி.

 

            “அப்புறம்? தம்பி எப்படி இருக்கீங்க? உங்க படம் பார்த்தேன். செம்மயா பண்ணியிருக்கீங்க, இப்போ எல்லாம் குறும்பட இயக்குநர்கள்தான் இண்டஸ்ட்ரியில கலக்குறாங்க. அதான் உங்களை செலக்ட் பண்ணினேன்” என்றார்.

 

            “ரொம்ப நன்றி சார், மகேந்திரன் சார்கூட சொன்னார்” என்று சொன்னவுடன், “மகேந்திரன்… சாரா…” என்று அவரை முறைத்தார் ஜேகேடி. ஜேகேடிக்கு காஃபி ஊற்றிக் கொடுத்துவிட்டு மீண்டும் தன் கைகளை கட்டியபடி தலைகுனிந்தபடி இருந்தார் மகேந்திரன். சீட் இருந்தும் அவர் உட்காரவில்லை.

 

            “சரி சரி, கதை இருக்கா உங்ககிட்ட?” கேட்டார் ஜேகேடி.

 

            “இருக்கு சார்” என்றான் வெற்றி.

 

            “ம்… ஆரம்பிங்க” என்று சொன்னவர், அருகில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞர்கள் புறம் திரும்பி “ஜோ, செல்வா இவர் சொல்லச்சொல்ல நோட் பண்ணுங்க” என்றார்.

 

            வெற்றி கதையை சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டே வந்தவர், அருகில் இருந்த மகேந்திரனை முறைக்க ஆரம்பித்தார். அந்த ஜோவும், செல்வாவும் நோட் பண்ணுவதை விட்டுவிட்டு தங்களுக்குள் முணுமுணுவென பேசி சிரிக்க ஆரம்பித்தனர்.

 

            “கதை போதும் வெற்றி, உங்ககிட்ட வேற மாதிரி எதிர்பார்த்தேன்” என்றார் ஜேகேடி.

 

            “சார்… வேற மாதிரின்னா?”

 

            “என்னா மகேந்திரா, எதுவும் சொல்லலையா, இவ்ளோ நேரம் கதை அடிச்சுட்டு இருந்தியா… வெற்றி, இந்த மகேந்திரன் இப்படித்தான் கிராமம் அது இதுன்னு கதை சொல்ல வந்தான். அது எல்லாம் எண்பதுகளோட போச்சு. அப்புறம் எங்கிட்டயே உதவியாளரா சேர்ந்துகிட்டான். நான் எதிர்பார்க்கிறது ஒரு பான் இண்டியா படம்”

 

            “சார், பான் இண்டியா படம்னா… வந்து பிரமாண்டமாவா?”

 

            “ஆமாபா, தோ இவனுங்க என் அண்ணா பசங்க. இவங்களுக்கும் இயக்குநர் ஆக ஆசை. இந்த ஜோ நல்லா நடிக்கவும் செய்வான். பயன்படுத்திக்கலாம். இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் செலவு பண்ணி படம் எடுக்கணும் நாம”

 

            “அதுக்கு நான்…”

 

            “அதான் ஜேகேடி. இதுபோல எடுக்க பிரபலமான காஸ்ட்லி இயக்குநரை செலக்ட் பண்ணுவாங்க. இந்தியாவிலேயே முதல் தடவையா ஒரு புதுமுக இயக்குநரை வச்சி உலகமே வியக்கும் அளவு ஒரு பான் இந்தியா படம் எடுத்து ஜெயிக்க வைக்கப்போறான் இந்த ஜேகேடி”

 

            “கதை…?”

 

            “நீங்க மூணு பேருதான் கதை பண்ணப்போறீங்க… ஜோ நீ ஆரம்பி” என்றார் ஜேகேடி.

 

            “முதல் சீன்லயே கருகும்முனு இருட்டு, அப்போ ஒரு வெளிச்சம் வருது. ஒரு ஹெலிகாஃப்டர்ல இருந்து ஒரு உருவம் இறங்குது… அதாவது ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வாசல் அது. இறங்கிய உருவம் முழு ஓவர் கோட் போட்ருக்கு. தொப்பி. கூலிங்க்ளாஸ். கையில் ஒரு கத்தி. நீளமா சாமுராய் படத்தில் வருமே… அதுபோல. இறங்கிய உருவம் அந்த ஹாஸ்டல் வாட்ச்மேனை அப்படியே கழுத்தை சீவுது. தலை தனியா பறக்குது. அப்போ தெறிக்கிற ரத்தத்துளியில் டைட்டில் ஆரம்பிக்குது”

 

            “செம்ம, அதுதான் ஹீரோவா?” என்றார் ஜேகேடி.

 

            “யார் சார்? வாட்ச்மேனா?” என்றான் வெற்றி. அவன் பிரமிப்பில் இருந்தான்.

 

            “கவனி வெற்றி. நல்லா கவனி. அது யாருன்னு இப்போ சொல்லப்போறதில்லை. அதான் டிவிஸ்ட்… நீ சொல்லு ஜோ”

 

            “அப்புறம் டைட்டில் முடிஞ்சு கதை ஆரம்பம். ஹீரோ ஒரு அயர்ன் கடை வச்சிருக்கார்.”

 

            “யார் போடலாம்னுகூட முடிவு பண்ணியாச்சு. திவாகர்தானே” ஜேகேடி.

 

            “சார், அவர் ஒரு படத்துக்குக்கே நூறுகோடி கேட்பார் சார். நான் வெறும் பத்துகோடியில் படமே முடிச்சுடுவேன்” என்றான் வெற்றி.

 

            “நீ பெரிய ஆளா வர வழி காட்டறேன் வெற்றி. உன் பெயர்தான் இப்போதைக்கு எனக்கு வேணும். நீ சும்மா கவனி. திவாகர் நூறுகோடியா, நூற்று ஐம்பது கோடி கொடுத்து அவனை புக் பண்றோம்”  என்றார் ஜேகேடி.

 

            வெற்றிக்கு மயக்கம் வரும்போல இருந்தது. மகேந்திரன் எதுவும் பேச வேண்டாம் என கண்காட்டினார். செல்வா ஆரம்பித்தான்.

 

            “உண்மையில் அயர்ன் கடை ஒரு மறைப்புதான். முன்னாடி ஒரு போர்வை போட்டு அந்த கடை ஒரு மறைப்புன்னு மறைமுகமா சொல்றோம். அந்த கடைக்கு முன்னாடி ஒரு இட்லி கடை இருக்கும். இட்லிகடைக்காரரா ஜிபிஎம் நடிக்க இருக்கார். இப்போ தெலுங்கு கன்னடம்னு அவர்தான் ஃபேமஸ். அவரு எப்படியும் ஐம்பது கோடி கேட்பார்.”

 

            “அவர் எதுக்கு?” மகேந்திரன் கேட்க அவரை முறைத்தார் ஜேகேடி.    

 

            “அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள். ஆனா பாதி படம் வரை சண்டை போட்டுட்டுதான் இருப்பாங்க. இண்டர்வெல் பிளாக்லதான் அவங்க நண்பர்கள்ன்னே வெளியே சொல்றோம். அடுத்த டிவிஸ்ட் இது” அடுத்து ஜோ ஆரம்பித்தான்.

 

            “என்ன விஷயம்னா, அவங்க இருக்கிற ஊருக்கு அவங்க பாதியில்தான் வந்தாங்க. அதுக்கு முன்ன என்ன பண்ணினாங்க, எப்படி இருந்தாங்க அப்படிங்கிறதெல்லாம் ஃப்ளாஷ்பேக்ல சொல்றோம். அது பின்னாடி வரும். அந்த ஊருக்கு ஏன் வராங்கன்னா, அங்கேதான் வில்லன் பாதாளஉலகம் போல தோண்டி அங்கே போதைப்பொருள், தங்கக்கடத்தல் பொருள் எல்லாம் மறைச்சு வைச்சிருக்கான். வில்லனை யாருமே பார்த்தது இல்லை. பத்து வருஷமா அவனை பிடிக்கதான் இவங்க மறைஞ்சு இருக்காங்க”

           

“பாதாள உலகம் போல செட்டுக்கு ஒரு நூறு கோடி ஆகுமா” கேட்டார் ஜேகேடி.

 

            “அவ்ளோலாம் ஆகாது, கம்மியா ஒரு தொண்ணூறு ஆகலாம்” என்றான் ஜோ.

 

            “ம், நூற்று ஐம்பது, ஒரு ஐம்பது ஒரு தொன்ணூறு… இன்னும் இருநூற்று பத்துக்கு வழி சொல்லுங்க. ஐநூறு கோடி பட்ஜெட்” என்றார் ஜேகேடி.

 

            “அந்த பாதாள உலகத்தில் ஒரு ஆயிரம் பேரு கொத்தடிமையா இருக்காங்க. வாரம் ஒருதடவைதான் சாப்பாடு. அதிலே ஹீரோவின் மகனும்  இருக்கான்.” என்றான் செல்வா.

 

            “இதான் முக்கியம், சென்டிமெண்ட் கலக்கணும்” ஜோ

 

            “ஆமா, அப்புறம் ஹீரோயின் கிடையாது. இதிலயும் புதுமையா பண்றோம். ஹீரோகூட பாதாள உலகத்தில் டான்ஸ் ஆட ரெண்டு மாடல் செலக்ட் பண்ணிக்கலாம். அவங்களுக்கு கொஞ்சம் செலவு ஆகலாம்” என்றான் செல்வா.

            “ஹீரோ இண்டர்வெல் முடிஞ்சு அதகளம் பண்றார். பாதாள உலகம் நுழையும் வழி இலங்கையில் இருக்கு. அங்கிருந்து கடல் வழியா பாதாளம் தோண்டி இங்க வந்து சேருது. அந்த வழியோட வரைபடம் லண்டன்ல இருக்கு. லண்டன்ல இருக்கும் டான் கேரக்டர்க்கு வடக்கத்திய ஹீரோ, இலங்கையில் வழியின் காவலுக்கு தெலுங்கு ஹீரோ, அப்புறம் காஷ்மீர்ல இருந்து சைனால இருந்து ஹெலிகாப்டர்ல ஹீரோவோட ஃப்ரெண்ட்ஸ் உதவிக்கு வராங்க. மொத்தம் ஒரு முன்னூறு தலையாவது உருளும். கதை முழுசும் இரவில்தான் நடக்கும். சிவப்பு கலருக்கு, அதான் ரத்தத்துக்கு மட்டும் ஐம்பது டேங்கர் லாரி தேவைப்படும்” என்றான் செல்வா. 

 

            “என் மகன் இசைன்னு போட்றலாம். அவனுக்குதான் அதில் ஆர்வம் இருக்கே. சும்மா பிஜிஎம் காதை பிளக்கணும். பாட்டுக்கு எதாவது பாத்துக்கலாம். பின்னாடி எதாவது பழைய பாட்டை ஓட விட்றலாம்” என்றார் ஜேகேடி.

 

            “உலகமே அலறணும்” என்றான் ஜோ. வெற்றியின் மண்டைக்குள் ஏதேதோ பிரளயங்கள் நடந்தன.

 

            “ஆனா, கதை ஏதோ இடிக்குதே” என்று மகேந்திரன் சொன்னதுதான் தாமதம், படாரென எழுந்து தன் முன்னால் இருந்த காஃபி கோப்பையை தூக்கி அவர் மேல் எறிந்த ஜேகேடி, “வெளிய போ நாயே, எப்பவும் உனக்கு  ஜீனியஸ்னு நெனப்பு” என்றார். தலையை குனிந்தபடி வெளியேறினார் மகேந்திரன்.

 

            “உனக்கு சம்பளமா ஒரு பத்து கோடி கொடுத்திடறேன் வெற்றி” என்றார் ஜேகேடி.

 

            வெற்றி வெளியே வரும்போது வாசலில் காத்திருந்தார் மகேந்திரன். பேயடித்தார்போல இருந்த வெற்றியின் தோளில் கைபோட்டு பேசினார்.

 

            “மனசை தளரவிடாதே வெற்றி. இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கோ. பேர் முதலில் வெளிய வரட்டும். அப்புறம் நீ நினைச்ச மாதிரி பண்ணலாம். பான்இந்தியா படம்னா என்னன்னே தெரியாத ஜென்மங்க. ரத்தவெறியை மனுஷன் மனசுல திணிக்கிறதுதான் இவனுங்க பான் இந்தியா படம்.  இந்தியா முழுக்க ரசிச்ச ஷோலே, தில்வாலே, பதேர் பாஞ்சாலி எல்லாம் பான் இந்தியா படம்தான். உணர்வு எல்லோருக்கும் பொதுவா இருக்கும். நீ அவசரப்படாதே. காத்திரு. என்னைப்போல் வீணாகிடாதே” என்றார்.

 

            முழுதாக ஒரு வருடம் படப்பிடிப்பு நடந்தது. ஐநூறு கோடியில் இருந்து எழுநூறு கோடி ஆகியது பட்ஜெட். ப்ரோமோஷனுக்கு ஹாலிவுட் ஸ்டார்கள் எல்லாம் வந்து திவாகரையும், ஜேகேடியையும் புகழ்ந்துவிட்டு கிளம்பினார்கள். டிக்கட் விற்பனை விர்ரென எகிறியது. இருபது மாநில முக்கிய நடிகர்கள் நடித்த பான் இந்தியா படமான “தீ….ர்த்துக்கட்டு” ரிலீஸ் ஆகியது.

 

            இரண்டாம் நாள்,

 

            ஜேகேடியின் அலுவலகம்.

 

            ஜேகேடி சீட்டில் இருந்தார். அவர் முன்னால் ஜோவும், செல்வாவும் இருந்தார்கள்.

 

            “என்னதான் ஆச்சு ஜோ?” என்றார் ஜேகேடி.

 

            “முழு உழைப்பையும் கொட்டிதான் எடுத்தோம். டிவிஸ்ட் எல்லாமே கைதட்டிதான் ரசிச்சாங்க” என்றான் ஜோ.

 

            “ஏதோ சின்ன தப்பு… அதான் புரியலை” என்றான் செல்வா.

 

            “எவ்ளோதான் வசூல்? ஆயிரம் கோடி ப்ளான். ஒரு பாதியாவது தேறுமா?”

 

            “ஐம்பது வந்திருக்கு… அதுவும் டிக்கட் புக்கிங்னால”

 

            “அப்போ இனிமே…?” ஜேகேடி.

 

            எதுவும் பேசவில்லை ஜோவும், செல்வாவும்.

 

            “சரி அதைவிடு, அந்த மகேந்திரன் ஏதோ கிராமத்து படம் எடுத்தானே, அது என்ன கதை?” கேட்டார் ஜேகேடி.

 

            “ரெண்டே மாசத்தில் எடுத்திருக்கான். அது ஏதோ கிராமத்து கதை. ஒரு சின்னப்பையன் சட்டை வாங்க…” ஜோ சொல்ல குறுக்கிட்டார் ஜேகேடி.

 

            “இருஇரு… இது… நம்ம வெற்றி அன்னிக்கு சொன்ன கதைபோல இருக்கே? அந்த மகேந்திரன் ஒட்டுகேட்டு எடுத்திருக்கான். எப்படி போகுதாம்”

 

            “போனவாரம் ரிலீஸ். இதுவரை நூறுகோடி வசூலாம். இன்னும் ஹவுஸ்ஃபுல்லாம்… முன்னூறு தாண்டும்னு சொல்றாங்க”

 

            “எவ்ளோ பட்ஜெட்?” ஜேகேடி.

 

            “பத்துகோடியாம்” ஜோ

 

            “ஏதாம், யாராம் ப்ரொடியூசர்?” கேட்டார் ஜேகேடி.

 

            “அது தெரியலை, ஆனா நாம வெற்றிக்கு சம்பளமா பத்துகோடிதான் கொடுத்தோம்” என்றான் ஜோ.

PrevPreviousவிதிவிலக்கற்ற 24
Nextசுவரின்றி சித்திரமா?Next

You Might Also Like

சுத்தம்…
குருதி…
கூண்டு கிளி…
தியாகம்
தீராக் கனல்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் மே 2026
Previous Article விதிவிலக்கற்ற 24
Next Article சுவரின்றி சித்திரமா?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?