அக்கா என்கிற கவிதை
- முத்தையா மோகன்
தென்னை விளைகள் கொஞ்சி விளையாடும் பொள்ளாச்சியின் ஒதுக்குப்புறமான அந்த கிராமத்தில் ஆனந்தம் தாண்டவமாடும் சிறிய குடும்பம். கணேசனுக்கும் கமலிக்கும் இரண்டாவதாக பிறந்த குழந்தைதான் நிலவன். நிலவைப்போல ஜொலிப்பாக இருந்ததாலோ என்னவோ அவனுக்கு பெயரையும் நிலவன் என்றே வைத்தார்கள்.
செல்வி பிறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அரிதாக வந்தான் நிலவன். செல்ல குழந்தை செல்வத்தை அள்ளிக் கொடுக்க வந்த குழந்தை என்று கொஞ்சி குலாவினர்கள் குடும்பத்தினர்கள்.
ஆறு மாதக் குழந்தையான நிலவன், மல்லாக்கப் படுத்துக்கொண்டு கைகளையும் கால்களையும் உதைத்தபடி சிரித்துக்கொண்டிருந்தான். அவனருகில் ஐந்து வயதான அவன் அக்கா செல்வி, தம்பியின் முகத்தையே பார்த்தபடி, ‘என் பட்டுக் குட்டியா நீங்க…, என் செல்ல பப்லுவா நீங்க…’ என்று கொஞ்சியபடி உட்கார்ந்திருந்தாள். திடீரென்று நிலவன் சிறுநீரைப் பீச்சியடித்தான்.
தயக்கமுமோ…. யோசனையோ… கொஞ்சமுமின்றி. இரு கைகளையும் நீட்டி அதைத் தடுத்துக்கொண்டு, “அடப்பாவி… அக்காவையே நனைச்சிட்டியே!” என்ற செல்வின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியின்களை கூடிக்கிடந்தது.
அதைப் பார்த்த கமலி ஓடிவந்து, “என்னடி இது? அவன் சிறுநீரைக்கூட கையில் பிடிக்கிறியே!” என்று செல்வியின் குமட்டில் குத்தியபடி செல்லமாக திட்டினாள்.
செல்வி, குழந்தையைப் பார்த்தபடியே, “இவன் என் தம்பிதானேமா…?” என்றாள்.
“ஆமாம்… உன் தம்பிதான் யாரு இல்லைன்னு சொன்னது அதுக்காக அநியாயத்துக்கு இப்படியா…” என்றாள் கமலி.
அவள் கைகளில் விழுந்தது ஒரு குழந்தையின் சிறுநீர் மட்டுமல்ல. வாழ்நாள் முழுவதும் விட்டுவிட முடியாத ஒரு பாசத்தின் முதல் துளி அது.
நிலவன் வளர வளர, அவனுடைய உலகத்தில் அம்மாவுக்கு அடுத்த இடம் செல்விக்குத்தான். அவன் தவழ்ந்து செல்லும்போது பின்னால் ஓடுவாள். நடக்கக் கற்றுக் கொண்டபோது விழுந்துவிடாமல் கையைப் பிடித்துக்கொள்வாள். பள்ளிக்குச் செல்லும் வயதில் அவனுடைய சட்டையைச் சரி செய்து, தலைமுடியை வாரிவிட்டு, “ஒழுங்கா போயிட்டு வா” என்று அனுப்புவாள்.
நிலவன் சாப்பிடாமல் அடம்பிடித்தால், “நான் ஊட்டினா மட்டும் சாப்பிடுவியா?” என்று கொஞ்சுவாள்.
இரவு அவன் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தால், அவனருகில் படுத்துக்கொண்டு செல்வி சொல்லுகிற கொஞ்சு மொழி மழலைக்கதைகளை கேட்டபடி உறங்கிப் போவான் நிலவன்.
ஒருநாள் காய்ச்சலில் நிலவன் துடித்துக் கொண்டிருந்தான். இரவு முழுவதும் அவன் நெற்றியில் ஈரத்துணி வைத்தபடி செல்வி விழித்திருந்தாள் ஒரு தாயைப்போல.
அதிகாலையில் கண்களைத் திறந்த நிலவன் மெதுவாகக் கேட்டான்.
“அக்கா… நீ தூங்கலையா?”
நிலா அவன் தலைமுடியை வருடியபடி, “நீ தூங்கிட்டா… நானும் தூங்கிடப் போறேன் அவ்வளவுதானேடா” என்றாள். அந்த வாக்கியம், அவளுடைய வாழ்க்கையின் பெரிய உண்மையாகவும், உணர்வுப்பிரவாக மாகவும் இருந்தது.
செல்வி கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினாள். நிலவனும் வளர்ந்து பள்ளி மாணவனானான். இருவருக்குமிடையே இருந்த குழந்தைப் பருவக் குறும்புகள் குறைந்தாலும், பாசம் மட்டும் குறையவில்லை. தென்னையைப் போல வளர்ந்து கொண்டே போனது.
“சாப்பிட்டியா?”
“எங்கே இருக்க?”
“எப்ப வீட்டுக்கு வர்ற?” என்று தொடங்கிய தொலைபேசி அழைப்புகளும், உரையாடல்களும்… அவர்களுடைய பாசத்துக்கான புதிய மொழியாக மாறின.
ஒருநாள் மாலை கணேசன், “செல்விக்கு கல்யாணம் முடிவு பண்ணிட்டோம்டா… நிலவா” என்றார். நிலவன் மகிழ்ச்சியாகச் சிரித்தபடி துள்ளிக்குதித்தான்.
“நிஜமாவா அப்பா?” என்றவனிடம், “ஆமாம்டா…” என்று மகிழ்ச்சியாக தலையசைத்தார் கணேசன்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், தயக்கத்துடன் கேட்டான்.
“கல்யாணத்துக்குப் அப்புறம்… அக்கா இங்கேயே இருப்பாளாப்பா…?”
கணேசன் பதில் சொல்லவில்லை.
அந்த மௌனமே பதிலாகிவிட்டது. அன்று இரவு நிலவனுக்கு உறக்கம் வரவில்லை. அக்காவுக்குக் கல்யாணம் நடக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம்… ஆனால், தன் வாழ்க்கையில் தினமும் உடனிருந்த அக்கா இனி தன்னுடன் இருக்கமாட்டாள் என்ற வெறுமை இன்னொரு பக்கம் என நெஞ்சை அழுத்தியது.
திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, செல்வி அவனிடம் வழக்கம்போல… அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தாள்.
“நிலவா… படிப்பை நல்லா முடிச்சுடு. அம்மா அப்பாவைப் பார்த்துக்கோ. இனிமேல் கொஞ்சம் பொறுப்பா இருக்கணும்.”
அவனுக்குள் இருந்த பயம் கோபமாக வெளியே வந்தது.
“நீ எப்ப பார்த்தாலும் அறிவுரைதான் சொல்ற. இன்னும் கொஞ்ச நாள்ல நீ வேற வீட்டுக்குப் போயிடுவ. அப்புறம் உன் வாழ்க்கைதான் முக்கியமா இருக்கும். என்னையெல்லாம் மறந்துடுவ” என்றான் கலக்கமாக.
செல்வி அமைதியாக அவனைப் பார்த்தாள். அந்த வார்த்தை அவளுடைய மனதை ஆழமாகக் காயப்படுத்தியது. அன்று முதல் ஒருவித மனப்பிறழ்வில் இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. மூன்று நாட்கள் அந்த வீடு அமைதியாக இருந்தது. நான்காம் நாள் காலை நிலவன் தன் மேசையின் மீது ஒரு சிறிய பெட்டியைப் பார்த்தான். அதற்குள் ஒரு கைக்கடிகாரம். அதனுடன் ஒரு சிறிய காகிதம் மடித்து வைக்கப்பட்டது.
“கோபம் இருந்தாலும் பரவாயில்லை. நேரம் எவ்வளவு ஓடினாலும், உன் அக்கா உன்னை நினைத்துக் கொண்டேயிருக்கிறாள் என்பதை மட்டும் மறந்துடாதே.”
அந்த வரிகளைப் படித்ததும் நிலவனின் கண்கள் கலங்கின.
அவன் ஓடிப்போய் செல்வியை அணைத்துக்கொண்டான்.
“சாரி அக்கா…”
செல்வி அவன் முதுகைத் தடவியபடி “நானும் உன்னைப் புரிஞ்சுக்காம கோபப்பட்டுட்டேன்.” என்றாள்.
சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.
அந்த அணைப்பில், குழந்தைப் பருவத்தின் ஆயிரம் நினைவுகள் இருந்தன.
அவர்களுக்குத் தெரியாது… அந்த வீட்டில் அவர்கள் ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் கடைசி நேரம் அது என்று.
திருமண நாள் வந்தது. வீடு முழுவதும் உறவினர்களின் சத்தம். சிரிப்பு. வாழ்த்துகள். பரபரப்பு. ஆனால் நிலவனின் மனம் மட்டும் அமைதியாக இருந்தது.
மணக்கோலத்தில் இருந்த செல்வியைப் பார்த்தபோது, அவனுக்குத் தெரிந்தது மணப்பெண் அல்ல. ஆறு மாதக் குழந்தையான தன்னைத் தாங்கிக்கிடந்த ஐந்து வயது சிறுமி. விழுந்தபோது கையை நீட்டிய அக்கா. காய்ச்சல் வந்த இரவில் விழித்திருந்த அக்கா. சாப்பிடாமல் இருந்தபோது ஊட்டிய அக்கா. தான் அழுதால் தன்னைவிட அதிகமாகக் கலங்கிய அக்கா.
பிரிய வேண்டிய நேரம் வந்தது.
செல்வி காரில் ஏறுவதற்கு முன் நிலவனைப் பார்த்தாள்.
“தம்பி…”
அந்த ஒரு வார்த்தை போதும்.
நிலவன் அவளுடைய தோளில் சாய்ந்தபடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.
“நீ எப்பக்கா திரும்ப வருவ?”
“அடிக்கடி வந்து உன்ன பாப்பேன்டா தம்பி…”
“எப்ப திரும்பி வருவ?”
“சீக்கிரம் வர்றேன்.”
“எத்தனை நாள்ல?”
அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை செல்வியால். அவள் அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். நிலவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதான்.
“நீ என்னை மறந்துடாதே அக்கா…”
செல்வி அவனுடைய நெற்றியில் முத்தமிட்டாள்.
“நான் எப்படி மறப்பேன்டா?”
நிலவன் செல்வியின் மேலும், செல்வி நிலவன் மேலும் வைத்திருந்த அளவு கடந்த பாசப் போராட்டத்தை நிகிழ்வோடு பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்கள் கணேசனும் கமலியும்… மற்ற உறவினரும்.
அக்கா ஏறி சென்ற காரை பார்த்தபடியே நிலவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.
கார் கண்ணுக்குத் தெரியாமல் போனதும், அவன் மெதுவாக அவள் அறைக்குள் சென்றான். காலியாக இருந்த நாற்காலியைப் பார்த்தவுடன் அவன் கண்கள் கலங்கின.
“அக்கா… நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ என் அழுக்கைக்கூட கையில் பிடிச்சியே… இன்னைக்கு என் கண்ணீரை மட்டும் பிடிக்காம போயிட்டியே…”
அவன் அறைக் கதவை மூடவில்லை. ஏனென்றால், அந்தக் கதவு வழியாகத்தான் ஒருநாள் மீண்டும் அவளின் குரல் கேட்கும் என்று அவன் மனம் இன்னும் காத்திருந்தது. அன்று அந்த வீட்டிலிருந்து அக்கா மட்டும் செல்லவில்லை. நிலவனின் குழந்தைப் பருவமும், அவனைத் தாங்கிய இரண்டு கைகளும்தான்.
பிறந்ததிலிருந்து, அவனுக்குள் எழுதி வைத்திருந்த, அவனோடு பயணப்பட்டுக் கொண்டிருந்த…. அவனுடைய கவிதை, எப்போது திரும்பவும் வரும் என்று காத்துக் கொண்டிருந்தான் நிலவன்.
***

