‘இன்னும் நிறைய எழுத வேண்டியுள்ளது’ – எழுத்தாளர் தேனம்மை லட்சுமணன்
- பரிவை சே. குமார்
தேனம்மை அக்காவை வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது முதல் பழக்கம். மிகச் சிறந்த எழுத்துக்குச் சொந்தக்காரர். அக்காவின் எழுத்து எங்களது பேச்சு வழக்கில் இருந்ததால் கூடுதல் நெருக்கம் ஏற்பட்ட பின்புதான் அவர் காரைக்குடி என்பது தெரிந்தது. அப்போது முதல் இப்போது வரை அவருக்கும் எனக்குமான நட்பு தொடர்வதில் மகிழ்ச்சி.
இப்போது அவர் நிறைய முக்கியமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். கவிஞராய், கதையாசிரியராய் அவர் பெற்றிருக்கும் விருதுகளைப் பற்றி எழுத நாலைந்து பக்கம் வேண்டும். இப்போது மட்டுமல்ல வலைப்பூவில் எழுதும் போதே நட்பு வட்டத்துக்குள் கொடுக்கப்படும் விருதுகளில் அதிகம் பெற்றவர். புன்னகை அரசியாய் எல்லாருடைய பதிவுகளையும் படித்து கருத்துக்களை இடத் தவறமாட்டார் என்பதால் விருதுகள் அவருக்கு கிடைத்த வண்ணம் இருந்தன. அது இப்போதும் தொடர்வது மகிழ்ச்சி
வட்டார வழக்கு என்பதைவிட செட்டி நாட்டுப் பேச்சு வழக்கு, அதிலும் குறிப்பாக செட்டியார்களின் பேச்சு வழக்கு, அவர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம், வாழ்வியல் என எல்லாவற்றையும் தனது படைப்புகளில் கொண்டு வருகிறார். இத்துடன் நில்லாமல் வரலாறுகளையும் தேடித்தேடி எழுதுகிறார். மேலும் பக்தி இலக்கியத்தின் பக்கமும் பயணக் கட்டுரைகளின் பக்கமும் ஒரு பாய்ச்சலைக் கொடுத்திருக்கிறார். பல வலைப்பூக்கள், யுடியூப் சேனல் என அடித்து ஆடுகிறார். நிறைய இதழ்களில் எழுதி வருகிறார். இப்போதும் வலைப்பூவை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன் மற்றவர்களின் வலைப்பூக்களில் கருத்தும் இட்டு வருகிறார்.
தன்னுடைய வாழ்வியலையும் அந்த மக்களின் பாடுகளையும் முடிந்தவரை பதிந்து வைத்துவிட வேண்டும் என்ற அவரின் வேட்கையே அவரைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. அவரின் ‘சும்மா’ வலைப்பூவில் அப்போதைய வலைப்பூ எழுத்தாளர்களின் பேட்டி போல் ஒன்றைப் பகிர்வார். அப்படி என்னிடமும் கேட்டு வாங்கிப் பகிர்ந்திருக்கிறார். இப்போது நான் அவரிடம் விண்மீன் இதழுக்காக வாங்கியிருக்கிறேன்.
அவரின் எண்ணம் போல் இன்னும் நிறைய அழகான, ஆத்மார்த்தமான படைப்புகளை தமிழ் எழுத்துலகுக்குத் தர பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
இனி….
- எழுத்தாளரல்லாத தேனம்மை லட்சுமணன் பற்றி…?
இல்லத்தரசி. இரண்டு பையன்களின் அம்மா. இப்போது ஒரு பேரனுக்கு அப்பத்தா. நண்பர்கள் சொற்பம். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் கையால் விதம்விதமாகச் சமைத்து, சாப்பாடு போடுவது பிடிக்கும். மற்ற நேரங்களில் நிறைய வாசிப்பேன். ஆன்மீக நம்பிக்கை உண்டு. Youtuber. இங்குள்ள பாதயாத்திரை மற்றும் பக்தி நூல்களில் வெளியான 3000-க்கும் மேலான பாடல்களைப் பாடி என் சேனலில் பதிவு செய்து வைத்துள்ளேன்.
- பிரபல எழுத்தாளரான தேனம்மை பற்றி…?
பிரபலம் என்றெல்லாம் சொல்ல முடியாது… ஓரளவு எழுத்துலகுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். நான் தொடர்ந்து எழுதி வருவதற்கு வலைப்பூ, முகநூல், மீடியா, பதிப்பக நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவுமே முக்கியமான காரணம்.
- எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்? உங்களின் முதல் படைப்பு எது?
என் முதல் கவிதை கிட்டத்தட்ட 12 வயதில் எழுதி இருப்பேன். அது என் அப்பாவின் பிறந்த நாளுக்கான ஒரு வாழ்த்துப்பா… அது எங்கள் பெரிய வீட்டின் சாமி அறையில் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருக்கு.
- வலைப்பூவில் எழுதும் காலத்தில் அறியப்பட்ட பிரபலமாக இருந்தவர் நீங்கள், அந்த வகையில் வலைப்பூ தங்களுக்குக் கொடுத்தது என்ன…? அது இப்போது தங்களுடைய எழுத்துக்கு எந்த வகையில் உதவியாய் இருக்கிறது?
வலைப்பூ மூலம் உங்களை போன்ற பதிவர்கள் எனக்குக் கொடுத்த ஊக்கம்தான் இன்று நான் இருக்கும் நிலைக்குக் காரணம். இன்றுவரை யார் வலைப்பூவில் எழுதுகிறார்களோ இல்லையோ நான் என்னுடைய எல்லாப் படைப்புகளையும் வலைப்பூவில் கட்டாயம் வெளியிட்டு வருகிறேன். முதல் வருடத்தில் ஆயிரம் பார்வைகளைக் கடப்பதே கடினமாக இருந்தது. அது 2009-ஆம் ஆண்டு; இன்று, 2026-இல் 40 லட்சம் பார்வைகளை எட்டி உள்ளது.
வலைப்பூவில் எழுதுபவர்களைப் போன நூற்றாண்டுக்காரர்கள் என்று கிண்டல் அடிப்பார்கள். ஆனால் இப்பொழுதும் என்னுடைய வலைப்பூவில் மாசம் 2 1/2 லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்கள். அதுதான் நான் இன்னும் சிறப்பானவற்றை, காலத்தால் அழியாதவற்றைக் கொடுக்க வேண்டும் என்ற ஊக்கத்தைத் தருகிறது.
- பதிப்புகள், புஸ்தகா, அமேசான் என நிறைய புத்தகங்களைக் கொண்டு வந்து விட்டீர்கள். இப்போது எழுத்தாளர் தேனம்மையாக வாசகர் மத்தியில் பிரபலமாக இருப்பது குறித்துச் சொல்லுங்களேன்?
நல்ல எழுத்துக்களை வாசகர்கள் தேடித்தேடி வாசிக்கிறார்கள். என்னுடைய சமீபத்திய நாவல் மற்றும் சிறுகதைத் தொகுதிகள் நிறைய வாசிப்பாளர்களைச் சென்று அடைந்துள்ளன. உண்மையான வாசிப்பின் மகத்துவத்தை நான் அதன் மூலம் உணர்ந்து கொண்டேன். நல்ல, காத்திரமான படைப்புகளை நாம் கொடுக்கும் பொழுது அவை நிச்சயம் அவற்றுக்கான வாசகர்களைக் கட்டாயம் சென்று சேர்ந்தே தீரும் என்பது காலத்தால் அழிக்க முடியாத உண்மை. இதன் மூலம் குறைந்த அளவு வாசகர்கள் இருந்தாலும் சிறந்த வாசகர்களைப் பெற்றுள்ளேன் என்பதில் எனக்கு பெருமையே.
- சிவகங்கை – குறிப்பாக செட்டிநாட்டு – பேச்சு வழக்கில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். ‘சோகி சிவா’ நாவலை அதில் முக்கியமானதாகக் கொள்ளலாம் என்றாலும் முழுக்க முழுக்க அந்த வழக்கை வைத்து நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா? அப்படியெனில் அந்த நாவல் எப்போது வெளிவரும்?
‘சோகி சிவா’ முழுக்க முழுக்கச் செட்டிநாட்டு நாவல்தான். மேலும் ‘செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள்’, ‘நான் சிவகாமி’ போன்றவற்றிலும் செட்டிநாட்டுச் சொல் வழக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘செட்டிநாட்டு பெண்களின் கதைகள்’ முழுக்க முழுக்கச் செட்டிநாட்டுச் சொல் வழக்கில் உள்ள சிறுகதைத் தொகுதிதான்.
இன்னுமொரு நாவல் எழுத வேண்டும். வெற்றி பெற்றவர்களையே கதாநாயகர்களாக வைத்து எழுதப்படுவது மரபு. வெற்றிக்காகப் பாடுபட்டுக் காலத்தால் ஜெயிக்க முடியாத ஒருவனைப் பற்றி ஒரு நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறது. அது முழுக்க முழுக்கச் செட்டிநாட்டுச் சொல்வழக்கிலேயே வரும். முழு ஆயத்தத்தோடு யாரையும்புண்படுத்தாமல் அதை எழுதச் சிலகாலம் அவகாசம் எடுக்கும்.
- விருகளுக்காகத் தாங்கள் என்பது போல் பல விருதுகளை வாங்கியிருக்கிறீர்கள்… இன்னும் வாங்குவீர்கள். தற்போது பெற்ற விருதுகளில் மறக்க முடியாத விருது எது? ஏன்?
நிறையப்பேர் விருதுகள் வாங்குகிறார்கள். அவர்களில் நானும் ஒருத்தி. உங்கள் புகழ்மொழிக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ‘பாடுவார் முத்தப்பர் விருது’ பெற்றது மறக்க முடியாத அனுபவம். எதிர்பாராதது மட்டுமல்ல… அதுவரை செட்டிநாட்டின் மாபெரும் தமிழறிஞர்களே (ஆண்கள்) பெற்ற அவ்விருதை முதல் பெண் கவிஞராகப் பெற்றபோது பிரமிப்பாய் இருந்தது. நான் அந்தப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் என்று என்னை என் வட்டாரத்தைச் சேர்ந்த அநேகரிடம் கொண்டு போய்ச் சேர்த்தது அவ்விருது.
- சும்மா வலைத்தளத்தில் பல புதுமைகளைச் செய்த நீங்கள் உங்கள் எழுத்தில் செய்திருக்கும் புதுமைகள் என்ன?
என் வலைப்பூவில் செய்தது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில். ‘பெண்மொழி ‘என்ற தலைப்பில் மெல்லினத்தில் வெளியான கட்டுரைகள் பல மூன்றாம் பாலினம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான அரசின் மறுவாழ்வுத் திட்டங்கள் பற்றியும், தற்பால் சேர்க்கை, எல்ஜிபிடி சமூகம் பற்றியும், பச்சிளம் குழந்தைகளுக்கான பாலியல் அச்சுறுத்தலுக்கான தீர்வுகளைப் பற்றியும் எழுத நேர்ந்தது என்னைப் பொறுத்த அளவில் புதுமைதான். மனத்தில் பட்டதைத் தெளிவான மொழியில் கூறவேண்டும் என்பதைக் கடைப்பிடித்து வருகிறேன்.
- தங்களின் ‘சாதனை அரசிகள்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாகப் பேசப்பட்ட சாதனைப் பெண்களின் வரலாறு. அதன் தொடர்ச்சியாய் இன்னும் பல சாதனைப் பெண்களைப் பற்றி எழுதும் எண்ணம் இருக்கிறதா…?
பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் பற்றிய கட்டுரைகள் ‘பளிச் பெண்கள்’. வணிகத்தில் ஈடுபட்ட பெண்களைப் பற்றி ‘இப்படியும் சாதிக்கலாம்’ என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றுள்ளது. இவை பத்ரிக்கைகளில் மற்றும் மாதாந்திரிகளில் வெளியான என்னுடைய ‘சாதனைப் பெண்கள்’ தொடர் போலத்தான்.
- சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, வரலாறு, தத்துவம், சிறார் இலக்கியம் என எல்லாவற்றையும் தங்களின் எழுத்தில் கொண்டு வருவது சிறப்பு. இதற்கான நேரத்தை எப்படி ஒதுக்குகிறீர்கள்?
தோன்றியதைத் தோன்றிய போது எழுதுவது, பத்திரிகைக்காகவோ இணையத்துக்காகவோ இவை கேட்கப்படும் பொழுது அவற்றிற்காக எழுதத் தொடங்குவது ஆகியன என்னைச் சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறார் இலக்கியம், தத்துவம், வரலாறு ஆகியவை எழுத தூண்டியது. பத்திரிகைகளில் தொடர்ந்து படைப்புகள் வெளிவந்ததால் சில சமயம் முன்னேற்பாடுடன் இவற்றை எழுதித் தயாராக வைத்துக் கொள்வேன். இப்படித்தான் நேரத்தை உருவாக்கிக் கொள்கிறேன். கொரோனாவுக்குப் பிறகு எழுதும் நேரம் கொஞ்சம் கம்மியாகி விட்டதுதான்.
- ஒரு பெண் எழுத்தாளராய் சமூகத்தில் எப்படி மதிக்கப்படுகிறீர்கள்? ஒருவேளை பலர் சொல்வதைப் போல் ஆணாதிக்க சமூகத்தால் தங்களது எழுத்துக்கும் ஏதேனும் சிக்கல்கள், தடைகள் வந்ததா?
ஒருமுறை வாசகர் ஒருவர் நீங்கள் எந்த இசத்திலும் சிக்கிக் கொள்ளாமல் எழுதுவது தான் உங்கள் சிறப்பு என்று கூறினார். என்னைச் சுற்றி உள்ளவற்றை, என்னைப் பாதித்தவற்றை, மற்றவர்களைப் புண்படுத்தாமல் காயப்படுத்தாத வண்ணம் எழுதுகிறேன். அரசியல், ஆன்மீகம், போன்றவற்றில் நான் என்னுடைய நம்பிக்கைகளை யார் மீதும் திணிப்பதில்லை. ஆணாதிக்க சமூகம் என்று இல்லை, ஆண் பெண் இருபாலாராலும் சிற்சில சமயங்களில் கருத்து வேற்றுமையைச் சந்தித்து இருந்திருந்தாலும் அவை என் எழுத்துக்கு தடையாக இல்லை.
- வலைப்பூவில் எழுதும்போது கிடைத்த சுதந்திரம் இப்போது கிடைக்கிறதா? வலைப்பூவில் வரும் கருத்துக்கள் நம்மைச் செதுக்க உதவியது போல், முகநூல், டுவிட்டர் கருத்துக்கள் உதவியாய் இருக்கிறதா?
இப்போது பொதுவெளியில் சிறிது கவனமாக தான் எழுத வேண்டி உள்ளது வலைப்பூவில் உள்ள சுதந்திரம் இல்லை. வலைப்பூவின் பின்னூட்டங்கள் நம்மை வளர்த்தெடுத்தன. முகநூல், ட்விட்டர் நம்மை விமர்சிக்கின்றன, எச்சரிக்கின்றன.
- தாங்கள் நிறைய வாசிப்பீர்கள், உங்களது வாசிப்பில் உங்களைக் கவர்ந்த நாவல், சிறுகதைப் பற்றிச் சொல்லுங்களேன்?
நாவல்களில் ‘ஏழை படும் பாடு’, ‘மந்திரப் பூனை’, ‘பார்த்திபன் கனவு’, ‘புயலிலே ஒரு தோணி’, ‘வைகாசி 19’, ‘குற்றப்பரம்பரை’, ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘குட்டி இளவரசன்’.
சிறுகதைகளில் தோப்பில் முகமது மீரான், சுஜாதா, வர்ஜீனியா வுல்ஃப், சித்ராதிவஹருன்னி, லியோ டால்ஸ்டாய், சிவகாமி, திலகவதி சுசீலா ஆகியோரின் சிறுகதைகள் பிடிக்கும். இன்னும் பலரும் உண்டு.
- தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்? அவரைப் பிடிக்கக் காரணம் என்ன?
டால்ஸ்டாய் மற்றும் வைக்கம் முகமது பஷீர். வாழ்வின் சிறு சிறு உணர்வுகளையும் தருணங்களையும் மிக அழகாக நுணுக்கமாகப் படைத்தவர்கள் அவர்கள். அழகை மட்டுமல்ல, அவலத்தையும், அவசத்தையும் கூடப் பல பரிமாணங்களில் பரிமாறியவர்கள். நாமும் இது போல் உண்மையாக எழுத வேண்டும் என்ற உந்துதலை உருவாக்கியவர்கள்.
- தங்களது வலைப்பூ நட்பு வட்டத்தில் தாங்கள் இன்னார் மிகப்பெரிய எழுத்தாளராக வருவார் என கணித்து வந்தவர்கள், வராதவர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?
ராய செல்லப்பா, ராமலக்ஷ்மி, நித்யா குமார், எம்.ஜி.பி, துளசி கோபால், துளசிதரன், சாந்தி மாரியப்பன், ஜம்புலிங்கம் ஆகியோர் சிறப்பாக வெளிப்பட்டுள்ளார்கள். அதிலும் நித்யா குமார் என்ற பரிவை சே குமார் மண்மணம் வீசும் பாசக் கதைகளுக்குச் சொந்தக்காரர். ராகவன் நைஜீரியா, ஸ்ரீராம் ஆகியோர் பதிப்புப் துறைக்குள் வரவில்லை என்பது வருத்தமே.
- கோலங்கள், தேனுஸ் ரெசிபி வலைதளங்களில் தொடர்ந்து இயங்கும் நீங்கள் யூடியுப் வழியாக இலக்கியப் பகிர்வுகளும் செய்கிறீர்கள். இவற்றையெல்லாம் தொகுத்து புத்தகங்களாக்கி இருக்கிறீர்களா…? அப்படியில்லை என்றால் எப்போது ஆக்கப் போகிறீர்கள்?
இதுவரை 2500 கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலுக்காகப் போட்டு உள்ளேன் அவற்றில் 100 கோலங்கள் ‘கோலங்கள்’ என்னும் பெயரில் பாரதி பதிப்பகத்தில் புத்தகமாக வெளியாகி உள்ளது. நான் போட்டிருக்கும் கோலங்கள் எல்லாமே ஏதோ ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு அமைந்தவை ஆகையால் அவற்றை ‘தீமாட்டிக் கோலங்கள்’ என்று வகைப்படுத்தி இருக்கிறேன்.
தேனு ரெசிப்பீஸில் அனேகம் பத்திரிகைகளில் வெளிவந்தவையே. இவற்றில் ‘கீரைகள்’ என்னும் தலைப்பில் 50 வகைகள் பற்றி புத்தகம் ஆகி உள்ளது.
இப்போதெல்லாம் நிறைய எழுத முடியவில்லை என்பதாலேயே youtube இல் இலக்கியப் பகிர்வுகளையும் புத்தக விமர்சனங்களையும் சினிமா விமர்சனங்களையும் சுற்றுலா சென்று வந்தவற்றையும் குரல் மூலம் பதிவு செய்கிறேன்
- இப்போது எழுதுபவர்களுக்கு தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வலைப்பூவில் எழுதினாலும் சரி முகநூல் போன்றவற்றில் எழுதினாலும் சரி உங்களுக்கு எழுத்தின் மேல் பிரியம் இருக்கும்வரைக்கும் எழுதிக் கொண்டே இருங்கள். காலம் இயையும்பொழுது அவை அனைத்தும் புத்தகமாக்கம் பெறும் ஆனால் புத்தகமாக வராவிட்டாலும் இணையத்தில் இருந்தாலே போதும். என்றைக்கு இருந்தாலும் உங்களுடைய எழுத்துக்கள் பேசும். ஆகையால் எழுத விருப்பம் இருப்பவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள். ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று, இப்படிக் கேட்டுக் கொண்டதற்காகவாவது வெவ்வேறு தலைப்புகளிலும், வெவ்வேறு சப்ஜெக்ட்களிலும் எழுத ஆரம்பியுங்கள். எழுத்து உங்களைத் தொடர்ந்து வரும். நீங்களும் எழுத்தை தொடர்ந்து செல்வீர்கள்.
- தேனம்மை லெட்சுமணனின் கனவு, லட்சியம் என்ன?
இதுவரை ஓரளவு எழுதி உள்ளேன். இன்னும் நிறையத் தலைப்புக்களில் எழுத வேண்டியுள்ளது. காலத்தால் அழியாத, காலமாற்றத்தாலும் அழியாத, நிறைய விபரங்களை, நான் வாழ்ந்த காலகட்டத்தில் உள்ளவற்றை உண்மையாகப் பதிவு செய்து வைத்து விட்டு போக வேண்டும் என எண்ணுகிறேன். இதுவரை என்ன செய்திருக்கிறோம் என அழகான திரும்பிப் பார்த்தலை அளித்த விண்மீன் ஆசிரியர் குழுவுக்கும் என்னைத் தேர்ந்தெடுத்துப் பேட்டி கண்டு, இன்று வரை என்னை எழுத வைத்துக் கொண்டிருக்கும் நண்பர் சகோதரர் பரிவை சே குமாருக்கும் நன்றி!
***

