பல வருடங்களுக்கு முன்பு உதகையில் இருந்து மசினகுடிக்கு இறங்கிக் கொண்டிருந்தோம். நண்பன் காரை ஓட்ட நான் அருகே அமர்ந்திருந்தேன். மலைப் பாதையின் ஒரு கொண்டை ஊசி வளையில் காவலர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களை நிறுத்திச் சிறிது நேரம் ஓரமாக நின்று ஒய்வெடுத்துவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்தனர்.
இறக்கத்தில் தொடர்ந்து ப்ரேக்கில் கால் வைத்து அழுத்திக் கொண்டே வந்தால் வண்டியின் ப்ரேக் பேடுகள் சூடேறி விடும். ஒரு கட்டத்தில் அப்படி சூட்டில் பழுத்துப் போன ப்ரேக் ட்ரம்மும், பேடுகளும் ஒன்றை ஒன்று கவ்விப் பிடித்து வண்டியை நிறுத்த முடியாது வாகனங்கள் பெரும் விபத்திற்குள்ளாக நேரிடும் என்பதை அன்று தான் அறிந்து கொண்டேன்.
நாம் கடந்த அத்தியாயத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஜபல் அக்தரில் இருந்து இறங்கும் போது, வண்டியை மிக மெதுவாக லோ கியரில் மட்டுமே செலுத்த வேண்டும். ஃபோர் வீல் ட்ரைவ் ஆப்ஷனையும் இயக்கிக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து ப்ரேக்கை மிதித்துக் கொண்டே வண்டி ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இது குறித்த புரிதல்கள் எதுவும் இன்றி சுற்றுலா செல்லும் உற்சாகத்தில் வேகத்தைக் குறைக்காது ப்ரேக்கில் இருந்து கால்களை எடுக்காது சரசரவெனக் கீழிறங்கும் போது ப்ரேக் பிடிக்காது போய் விடும். அதனால் அப்படிப் பட்ட ஓட்டுனர்கள் பாதுகாப்புச் சுவற்றில் முட்டி பெரும் விபத்தில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக அரசு, இறங்கும் வழியில் ஆங்காங்கே ‘எஸ்கேப் லேன்’ என்ற ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கின்றது.
‘எஸ்கேப் லேன்’ என்பது சாலையின் வலது புறம் 200 முதல் 300 மீட்டர் நீளத்திற்கு ஒரு தனி பாதை போட்டு அதில் இரண்டடி உயரத்திற்கு அரை ஜல்லியைக் கொட்டப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு. பாதையின் முடிவில் நல்ல பளிச்சென்ற மஞ்சள் நிற ப்ளாஸ்டிக் ட்ரம்களை பல வரிசைகளில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். ப்ரேக் ஃபெயிலியராகி வண்டியைக் கன்ட்ரோல் செய்ய முடியாமல் தடுமாறுவோர் இது போன்ற எஸ்கேப் லேன்களுக்குள் நுழைந்து உயிருக்கும், உடமைகளுக்கும் பெரிய தோதாரம் இன்றிப் பிழைத்துக் கொள்ளலாம். நான் வாழ்வில் முதன் முறை ‘எஸ்கேப் லேன்’ என்ற சங்கதியை அறிந்து கொண்டது இந்த ஜபல் அக்தர் சாலையில் தான்.
ஜபல் அக்தரில் இருந்து இறங்கியவுடன் வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் நிஸ்வாவை அடுத்துள்ள ஹம்ரா என்ற ஊரை நோக்கி வண்டியை விரட்டுவர். ஆனால் நாம் அரக்கப் பரக்கப் பயணிக்கும் வழக்கமான பயணிகளைப் போலன்றி ஆற அமர நிதானமாகச் சுற்றுபவர்களல்லவா? அதனால் உங்களை அடிவாரச் சிற்றூரான ‘பிர்கத் அல் மொளஸை’ அடுத்துள்ள ‘இஸ்கி’ மற்றும் ‘இம்தி’ என்ற இரு ஊர்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி விட்டு ஜபல் அக்தருக்குத் தப்பி ஓடும் முன் பழைய இமாம் வாழ்ந்த ‘தனுஃப்’ என்ற ஊரையும் அங்குள்ள சிதிலமடைந்த அவரது அரண்மனையையும் சுற்றிக் காட்டுவதே இன்றைய திட்டம்.
முதலில் ‘இம்தி’ என்ற அந்தச் சிற்றூருக்குச் செல்வோம். அந்த ஊர் சமீத்தில் ஓமானிகளிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. ஓமானின் நுண்கலைக் கழகம் (Oman Society of Fire Arts – OSMA) இந்த ஊரின் சிதிலமடைந்து கிடக்கும் புராதான குடியிருப்புப் பகுதிகளின் சுவர்களில் ஓமானின் புகழ் பெற்ற ஓவியர்களை வரவழைத்து தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தக் கோரியது.
Imty with colours of goodness என்ற 200 ஆண்டு கால புராதன கிராமத்தைப் புனரமைக்கும் முயற்சியை ஊக்கப்படுத்தும் விதமாக சுல்தான் ஹைதமின் மனைவியான மேதகு ‘சயீதா அகட் அல் புசைடியா’ மார்ச் 2021-இல் ‘இம்தி’ நகரைப் பார்வையிட்டார். அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த ஓவியங்களையும், தனித்துவமான அந்த ஊரில் கிடைக்கும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பாரம்பரிய மண் வீடுகளையும் அவர் வியந்தோதிப் பாராட்ட, அதுவரை கேட்பாரற்றுக் கிடந்த அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க ஓமானிகள் சாரி சாரியாகக் கிளம்பி விட்டனர்.
அந்த ஊரின் நடுவே ஒரு பெரும் மரம் ஒன்றிருக்கிறது. அதனைச் சுற்றி வாய்க்கால் நீர் சலசலத்து ஓடுகிறது. ஜபல் அக்தர் போரின் போது ஒரு குண்டு விழுந்து அந்த மரம் இரண்டாகப் பிளக்கப்பட்டுவிட்டது. போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டு தாக்கியும், நடுமரம் இரண்டாகப் பிளவுபட்ட போதும்… “என்னை வீழ்வேனென்று நினைத்தாயோ?” என விடாப்பிடியாக மீண்டும் தழைத்து, இன்று பெரிதாகக் கிளைபரப்பி நிழல் தரும் தருவாக ஊர்மக்களுக்குப் பயன்படும் வகையில் இறுமாந்து நிற்கிறது. இந்த மரம் ஒரு வகையில் போரால் பிளவுபட்டும் ஒருங்கிணைந்து தழைத்த ஓமானின் உருவகம். ‘இம்தி’ மக்கள் இம்மரத்தைப் பற்றிப் பேசும் போது பூரித்துப் போகின்றனர்.
அந்த மரத்தைத் தாண்டி பழைய இடிபாடுகளுக்கிடையே ஒரு உலா போய் வருவது தனித்த அனுபவம். சிறிதும் பெரிதுமான வீடுகள், சமையலறைகள், சமையலறைக்குள்ளே ஓடும் வாய்க்கால், வீடுகளை ஒட்டியிருக்கும் தோப்புகள், ஆங்காங்கே சுவர்களிலும், விளக்குக் கம்பங்களிலும், பெருமரங்களிலும் வரையப்பட்டிருக்கும் வண்ண ஓவியங்கள், ஊரின் முகப்பில் இருக்கும் மிக அழகாகப் பார்த்துப் பார்த்து வடிவமைக்கப் பட்டிருக்கும் காஃபி ஷாப் என இரண்டு முதல் மூன்று மணி நேரங்களுக்கு ஒரு சிற்றுலா சென்று வர ‘இம்தி’ ஒரு அருமையான ஆப்ஷன்.
அங்கிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘இஸ்கி’க்குச் செல்வோம். ‘இஸ்கி’ சிறிய ஊர்தான். இப்போது அங்கு வாழும் மக்கள் அனைவரும் தாய் பிள்ளைகளாக, மாமன் மச்சான்களாக மிக ஒற்றுமையாக ஓமானிகள் என்ற ஒற்றை அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் அந்த ஊரில் ‘ஹரத் அல் நஸர்’ ( Harat Al Nizar ) மற்றும் ‘ஹரத் அல் யெமன்’ (Harat Al Yaman) என்ற பெரிய பெரிய குட்டிச்சுவர் பகுதிகள் எதிரும் புதிருமாக இருக்கின்றன. இந்த இரு சிறு ஊர்களுக்கும் இனக்குழுக்களுக்கும் இடையே இருந்த பகைக்கு வயது கிட்டத்தட்ட 2000 ஆயிரம் வருடங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு வரை எலியும் பூனையுமாக இருந்த இந்த இரு இனக்குழுக்களும் ஒன்று சேரக் காரணமே ‘ஜபல் அக்தர்’ போர்தான் என்பது ஒரு ஆச்சர்யமான வரலாற்றுத் தகவல்.
இண்டீரியர் ஓமானின் புதிய இமாமாகப் பதவியேற்ற ‘சாலிம் பின் ரஷீத் அல் குரூஸி’யின் தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து மஸ்கட்டின் ‘சுல்தான் சையது பின் தைமூரை’ எதிர்த்துப் போரிட்ட சமயத்தில் தங்களது ஆயிரத்து எண்ணூறு ஆண்டு கால பகையை ஒதுக்கித் தூர வைத்து விட்டு நிஸாரிகளும், யெமனிகளும் ஒன்றிணைந்தனர்.
ஒரு வழியாக ‘ஜபல் அக்தர்’ போர் முடிவிற்கு வந்து, ‘சுல்தான் காபூஸ்’ பதவியேற்ற பிறகு ஓமான் நவீனமடையத் துவங்கியது. ‘ஹரத் அல் யெமனி’ மற்றும் ‘ஹரத் அல் நிஸாரி’ என்ற பண்டைய குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியேறி ஒருங்கிணைந்த “இஸ்கி’ நகரில் மக்கள் ஒற்றுமையாக வாழத் துவங்கினர்.
‘இஸ்கி’யில் மட்டுமின்றி ஓமான் முழுவதும் மக்களிடம் நீங்கள் ஹினாய்கள் என்பதை விட, காஃப்ரிகள் என்பதை விட ,மேலும் வேறு எந்த இனக்குழுவினர் எனச் சொல்லிக் கொள்வதையும் விட, நீங்கள் அனைவரும் ஓமானிகள் என்பதே முதன்மையும் முக்கியமும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்திய மறைந்த முன்னாள் மன்னர் சுல்தான் காபூஸின் சீரிய தலைமைப் பண்பு ஒட்டு மொத்த நாட்டையும் இறுகப் பிணைத்து ஓமானி தேசியத்தை வளர்த்தெடுத்தது.
பழைய பகையின் தழும்புகளாகவும், இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றின் சாட்சியாகவும் அந்த இரு சிதிலமடைந்த குடியிருப்புகளும் இன்றும் நிற்கின்றன. அந்த பெரும் மதிற்சுவர்களைத் தடவிக் கொண்டே அதன் அழகிய வளைவுகளைக் கடந்து எதிரெதிரே இருக்கும் இரண்டு ஹரத்களின் குறுகிய தெருக்களில் நடக்கும் போதெல்லாம் எல்லாத் திசைகளிலும் கலாச்சாரத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டிருந்த மக்களை ஒரு பொது எதிரி இணைத்து வைத்ததும் அந்த இணைப்பை மேலும் இறுகப் பிணைத்து வைத்தும், இவர்களது மனங்களை அன்பாலும் வென்ற தலைவனின் கனிந்த முகமே கண் முன் தோன்றுகிறது.
இந்த அத்தியாயத்தின் முடிவுரையை தனுஃப் நகரின் இடிபாடுகளுக்கிடையில் நின்று எமுத விரும்புகிறேன். ‘நிஸ்வா’வில் இருந்து ‘ஹம்ரா’ என்ற ஊருக்குச் செல்லும் வழியில் தான் ‘தனுஃப்’ என்ற சிற்றூர் இருக்கிறது.
அங்கிருந்து தான் ‘இமாம் காலிப் பின் அலி அல் ஹினாய்’, அவரது சகோதரர் ‘தாலிப் பின் அலி ஹனாய்’ மற்றும் தனது தளபதி ‘ஷேக் சுலைமான் பின் ஹிம்யார் அல் நபானி’ என்ற மூவர் அணி சுல்தான் மற்றும் பிரிட்டிஷ் படையினரை எதிர்த்துத் தீரத்துடன் போரிட்டது. ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF)-ன் குண்டு வீச்சில் ‘தனுஃப்’ நகரின் கோட்டை முற்றிலும் சிதைக்கப்பட, இமாம் தனது படைகளுடன் ‘ஜபல் அக்தருக்கு’ இடம் பெயர்ந்தார். கடைசியாக 1959 ல் ஜபல் அக்தரும் சுல்தானிடம் வீழ்ந்த போது இமாம் தனது சகோதரருடனும், தளபதியுடனும் சவுதி அரேபியாவிற்குப் புலம் பெயர்ந்தார்.
இந்தக் கதைகளை அறிந்தோரது கண்களுக்கு மட்டும் இம்தி, இஸ்கி அல்லது ஓமானின் பிற பகுதிகளில் உள்ள காலத்தால் பராமரிப்பின்றிச் சிதிலமடைந்த புராதான மண் குடியிருப்புப் பகுதிகளைப் போலன்றி ‘தனுஃப்’ நகரின் இடிபாடுகள் குண்டு வீச்சால் தகர்க்கப்பட்டதன் அறிகுறிகள் புலப்படும்.
1970-ஆம் ஆண்டு தனது தந்தையை ஆட்சியில் இருந்து கத்தியின்றி ரத்தமின்றி அகற்றிவிட்டு ஓமானின் புதிய சுல்தானாகப் பதவியேற்றுக் கொண்ட ‘சுல்தான் காபூஸ்’ ஒமானின் மறு மலர்ச்சிக்கு வித்திட்டார். தனது தந்தையை எதிர்த்துப் போரிட்டவர்களோடு எந்தப் பகைமையும் பாராட்டாமல் தனது அரசில் அவர்களில் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களுக்குத் தக்க பதவிகளை அளித்தார்.
சவுதி அரேபிய அரசின் விருந்தினர்களாக வாழ்ந்து வந்த இமாம், அவரது தளபதி, அவருடைய சகோதரர் மற்றும் அவரது அனைத்து உறவினர்களையும் ஓமானுக்குத் திரும்ப வந்து தேசக் கட்டுமானத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு ‘சுல்தான் காபூஸ்’ நேசக் கரம் நீட்டினார். பெரும்பாலான அல் ஹினாய் குடும்பத்தினர் நாடு திரும்பினர். அவர்களில் ஏராளமானவர்கள் அரசுப் பதவிகளிலும் அமர்ந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு மந்திரிப் பதவிகளும் வழங்கப் பட்டன.
சுல்தான் காபூஸின் சமாதானத்தை ஏற்றுக் கொண்டு நட்பு பாராட்டினாலும் இமாம் காலிப் அல் ஹினாய் தனது இறுதி காலம் வரை ‘தமாம்’ நகரிலேயே வாழ்ந்து மறைந்தார். ஓமானுக்குத் திரும்பினால் அது தனது ‘இமாமேட்’டை சுல்தானின் அதிகாரத்திடம் முழுமையாக ஒப்படைத்ததாகத் தானே அர்த்தமாகும்? அதற்கு அவரது மனம் இடம் கொடுத்திருக்காது. மேலும் தான் ஓமானுக்குத் திரும்புவதால் ஆறிய புண்ணைக் குத்திக் கிளறி விட்டதைப் போலாகிவிடக் கூடாது என்றும் அவர் கருதியிருந்திருக்கக் கூடும்.
‘அல் சையது’ குடும்பத்தினரது நல்லாட்சியில் ஒருங்கிணைத்த ஒமான் வளர்ச்சி பெற்று மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்பதே இமாமின் விருப்பமாக இருந்தது.
ஒரு போரில் வென்றாலும் தோற்றாலும் பழி பகை பாராட்டாது, இழப்புகளை மறந்து, பழியுணர்ச்சிகளைப் புறந்தள்ளி, ஒரு தாய் மக்களாகக் கைகோர்த்து எப்படி வளர்ச்சிப் பாதையில் வீறு நடை போடுவது என்ற பாடத்தை உலகம் இச்சிறு தேசத்திடமும் அதன் இரு தரப்புத் தலைவர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும்.
பல நூற்றாண்டு கால இனக்குழுப் பகை மற்றும் போர்களின் வடுக்களாக இன்றும் இந்தக் குட்டிச்சுவர்கள் நின்று கொண்டிருக்கின்றன. இந்த மண் சுவர்களுக்குப் பின் உள்ள இப்பழங்கதைகளைப் பற்றி முழுமையாகத் தெரியாமலேயே இவற்றைச் சுற்றிப் பார்க்க வரும் பெரும்பாலான பயணிகள் இவற்றின் முன் நின்று படங்களைப் பிடித்துக் கொண்டு நகர்கின்றனர்.
ஆனால் ஒரு காலத்தில் நிஸ்வாவிற்கு வரும்போது நீங்கள் எடுத்துக் கொள்ளும் படங்கள் அர்த்தம் பொதிந்தவைகளாக இருக்கும்.


